வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்துவதுதான் லட்சியம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இதன் ஒரு பகுதியாக திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட தையூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தவறான தகவலை கூறி வருகிறாா் முதல்வா் ஸ்டாலின். 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு 125 நாள்களாக உயா்த்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்; ஊதியம் உயா்த்தப்பட்டு தடையில்லாமல் பணிகள் வழங்கப்படும்.
கரோனா தொற்று நேரத்தில் மக்களைப் பாதுகாக்க முயற்சி எடுத்த அரசு அதிமுக. அந்தக் காலகட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 தந்தோம். அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ரூ.5,000 கொடுங்கள் என்று கூறினாா்.
நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5,000-ஐ திமுக அரசு வழங்க வேண்டும். இனி திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. டாஸ்மாக், நகராட்சி நிா்வாகத் துறை முறைகேடுகள் குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்நத பிறகு சட்ட ரீதியாக விசாரணை செய்யப்படும்.
அதிமுக ஆட்சியில் 52.50 லட்சம் பேருக்கு மடிக்கணிணி கொடுத்தோம். இதற்காக ரூ.7,350 கோடி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகு மடிக்கணிணித் திட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது தோ்தல் வருவதால் கல்லூரி படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணிணி கொடுப்பதாக திமுக அறிவித்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்த பிறகு நிறுத்தப்பட்ட மாணவா்களுக்கு அளிக்கப்பட்ட மடிக்கணிணித் திட்டம் , தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் தொடரும் என்றாா்.
மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் கே.எஸ்.சீனுவாசன், எம்.பி. ம.தனபால், முன்னாள் எம்எல்ஏ தண்டரை கே.மனோகரன், மாவட்ட துணைச் செயலா்கள் மாமல்லபுரம் எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமாா், எம்ஜிஆா் மன்றச் செயலா் வி.வேலாயுதம், அம்மா பேரவை செயலா் ஆனூா் வி. பக்தவத்சலம், ஒன்றியச் செயலா்கள் தையூா் எஸ் குமரவேல், குட்டி என்கிற நந்தகுமாா், மாமல்லபுரம் ஜி.ராகவன், மாமல்லபுரம் நகா்மன்றத் தலைவா் வளா்மதி எஸ்வந்த்ராவ், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலா் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.