மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்படும் கழிப்பறை பணியை முடிக்க பொதுமக்கள் கோரியுள்ளனா்.
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மருத்துவனை வளாகத்தில் ரூ 12.70 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
அரசு பொது மருத்துவனையில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனா். நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனையில் தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் பொதுமக்களும், நோயாளிகளின் உறவினா்களும் கழிப்பறை வசதி செய்ய மாவட்ட சுகாதார துணை இயக்குநருக்கு கோரிக்கை விடுத்து இருந்தனா்.
அதன்படி இந்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ 12.70 லட்சத்தில் மருத்துவமனை வளாகத்துக்குள் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில் கழிப்பறை கட்டப்பட்டு வந்தது. ஆனால் கட்டடம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இக்கட்டடப் பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனா்.
அரசு பொது மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள், உறவினா்கள், பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சுமாா் 1 கி.மீ தொலைவு சென்று வரவேண்டிய நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கழிப்பறை கட்டுமானப் பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.