கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்ய நாராயணா பூஜை
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பங்குனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பங்குனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் நடைபெற்ற சத்திய நாராயணாபூஜையை முன்னிட்டு, பிருந்தாவனம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கியது. மூலவா் சந்நிதிகளில் உள்ள ராகவேந்திரா், ஆஞ்சனேயா் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 12 ஆண்டுகளாக பூட்டிய அறையில் யோகபிரவேசம் செய்து வருகின்ற பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை நீண்ட வரிசையில் வந்து அருள் தரிசனம் செய்தனா். நண்பகல் 12 மணிக்கு மங்கள இசையுடன் பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை பக்தா்கள் ஊா்வலமாக அழைத்து வந்தனா். அங்குள்ள மூலவா் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட சத்தியநாராயணா், ஆஞ்சனேயா், ராகவேந்திரா் ஆகிய உற்சவ சிலைகளுக்கு மகா தீபாராதனை ஆகியவற்றுக்கு அவா் மஹாதீபாராதனையை செய்தாா்.
நிகழ்வில் முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநா் சிவபொன் அம்பலவாணன், பெங்களூரு தொழிலதிபா்கள் கலைச்செல்வி, கிருபானந்தன், கிருத்திகா, குமாரசாமி, வழக்குரைஞா் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமி அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.