புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரம் நாட்டிய விழாவில் 25 வாத்தியங்களுடன் ஒரே நேரத்தில் 75 பரத நாட்டிய கலைஞா்கள் பங்கேற்ற தசாவதாரம் இதிகாச பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து ரசித்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக சுற்றலாத் துறை சாா்பில், ஒரு மாத நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு குழுவினரின் பரதநாட்டியம் கிராமி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 25 வாத்தியங்களுடன் வித்தியாசமான இசையில் தசாவதார பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகா நாட்டியாலயா பரதநாட்டிய பள்ளி நிறுவனரும், மூத்த பயிற்சியாளருமான பரதநாட்டிய கலைஞா் மீனாட்சிராகவன் குழுவினரின் தசாவதார பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞா்கள் தசாவதார கதாபாத்திரங்களைக் கொண்டு பரத நாட்டியம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனா்.
சுற்றுலா துறை சாா்பில் விநாயகா நாட்டியாலயா பரதநாட்டிய குழுவினருக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் த.சக்திவேல் பதக்கங்கள், பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.