முகப்பு
தினமணி கதிர்

இலக்கை அடைய குறிக்கோள் தேவை!

'வீட்டுப் பாடங்கள், விளையாட்டு, நடனப் பயிற்சி ஆகிய மூன்றுக்கும் சரியாக நேரம் ஒதுக்குவேன்.

Updated On : 15 பிப்ரவரி 2026, 4:11 pm IST
பகிர்:

பொ.ஜெயச்சந்திரன்

'வீட்டுப் பாடங்கள், விளையாட்டு, நடனப் பயிற்சி ஆகிய மூன்றுக்கும் சரியாக நேரம் ஒதுக்குவேன். சோர்வு ஏற்பட்டாலும், என் இலக்கை அடைய குறிக்கோளாக இருப்பேன். தேர்வுகளின்போதும் நடனப் பயிற்சியில் ஈடுபடுவேன்' என்கிறார் பரதநாட்டியத்தில் அசத்தும் மாணவி சு.வி.சம்ரித்தி.

பழனியில் நடைபெற்ற முருகன் தமிழ் மாநாட்டில் தனது நடனத் திறமையை வெளிப்படுத்திய சம்ரித்தி, தொடர்ந்து 365 நாள்கள் பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.சுஜித் - ஆர்.வித்யா தம்பதியின் மகளான சம்ரித்தி, டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயாவில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கலை, கல்வி, மேடை ஆகிய மூன்றிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி அசத்தி வரும் அவரிடம் பேசியபோது:

'எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். நான் யு.கே.ஜி. படிக்கும்போது, நடராஜா நாட்டியப் பள்ளியில் பரதம் பயில்வதற்கு ஆசிரியர் லாவண்யா செந்தில்வேலிடம் சேர்க்கப்பட்டேன்.

பள்ளித் தேர்வுகளிலும் ஏ கிரேடு பெற்றுள்ளேன். பள்ளியில் தொகுப்பாளினி, மேடைப்பேச்சு, கட்டுரைப் போட்டி எனப் பலவற்றில் சிறந்து விளங்குகிறேன். ஹிந்தி மத்யமம் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தேன்.

2019-ஆம் ஆண்டு நவம்பர் 3-இல் சலங்கை பூஜை நடைபெற்று, 2025-ஆம் ஆண்டு ஜூன் 13-இல் பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்தேன். தனியார் தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

2022-இல் சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயில், கேரளா குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களிலும், 2023-இல் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் சின்னமேளம் நிகழ்வு, பாடி திருவலிதாயநாதர் கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

2024-இல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டு கலை நிகழ்வு, மலேசியா சிலாங்கூர் முருகன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில்களில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

அரும்பாக்கம் கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கலசரோவர்-2025 போட்டியிலும், எங்களது பள்ளியில் கருணா இண்டர்நேஷனல் நடனப் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றேன்.

இவ்வாண்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய நாட்டியத் திருவிழாவில் பரத நிகழ்வில் பங்கேற்றுள்ளேன். இதுபோல், பல விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்' என்கிறார் சு.வி.சம்ரித்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.