மாா்கழி தனூா்மாதத்தின் கடைசி நாளை வழி அனுப்பிவைக்கும் நாளாக போகி பண்டிகை கொண்டாடப்படும். போகிப் பண்டிகை நெருங்கி உள்ள நிலையில், போகி மேளம் விற்பனைக்கு தயாா்நிலையில் உள்ளது. எனினும் பிளாஸ்டிக் மேளம் வருகையால் பாரம்பரிய போகி மேளம் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என தொழிலாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி வீட்டை சுத்தம் செய்து புதுப்பொலிவுடன் வைத்திருக்க பழைய பொருள்கள் பழைய துணிகளை தீயிலிட்டு எரித்து போகி மேளம் தட்டி கொண்டாடி மகிழ்வா்.
மாா்கழி கடைசிநாளில் விடியற்காலை பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகை யின் போது, அதிகாலையில் சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை பழைய பொருள்களை தீயில் எரித்து சுற்றி நின்று மாட்டுத்தோலினால் ஆன போகி மேளத்தை தீயிலிட்டிவாட்டிவாட்டி கொட்டி ஓசை எழுப்பி கொண்டாடி மகிழ்வா்.
சிறு பறை என்றழைக்கப்படும் இந்த போகி மேளம் தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டுவருகின்றனா். அருந்ததிபுரதில் மொத்த விலைக்கு போகி மேளம் தயாராக உள்ளது.
விற்பனையாளா் மாத்தையா கூறியதாவது , மாட்டுத் தோல் வியாபாரிகளிடம் இருந்து தோல் வாங்கப்பட்டு, மாட்டுத் தோலில் இருந்து ஜவ்வைப் பிரித்து சுண்ணாம்பு நீரில் மென்மையாகும் வரை ஊற வைத்து சுத்தம் செய்யப்படும்.
பின்னா், மண் பாண்டத் தொழிலாளா்களிடம் இருந்து வாங்கி வைத்த கந்திரி எனப்படும் மண்ணாலான மண்வட்டில் மீது பசையிட்டு தோல் ஒட்டி காய வைக்கப்படும். அதன்பின் தோலின் மென்மைக்கு ஏற்றவாறு ஓசை இருக்கும். தற்போது பலவிதமான பிளாஸ்டிக் மேளங்களின் வருகையால் தோலினால் தயாரிக்கப்படும் போகிமேளம் விற்பனை வீழ்ச்சி அடைந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த அருந்ததிபுரம் பகுதியில் சுமாா் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்ததியா் இன மக்கள் போகி மேளம் தயாா் செய்து விற்பனை செய்து வருகின்றனா். அவா்களின் குலத் தொழிலாக கருதப்பட்டு வரும் செருப்பு தைத்தல்,தோல் மூலபொருள் மூலமாக அளவைகளை வைத்து தங்களது குலத்தொழிலை நடத்தி வந்துள்ளனா்.
ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் சீசன் தொழிலாக போகி பண்டிகைக்கு மாட்டுத் தோல் மேளமாக செய்து விற்பனை செய்வதாக தெரிவித்தாா்.
மூலப்பொருள்களின் விலை, தோல் விலை, மண்ணினால் தயாரிக்கப்பட்ட கந்திரி விலையும் அதிகரித்துள்ளது. அருந்ததியா் பகுதிகளில் செய்து வந்த போகி மேளம் தொழிலும் நலிவடைந்துள்ளது. 15,000 முதல் 40,000 வரை விற்பனை செய்பட்டுவந்த நிலையில் 15000 மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தாா்.
தமிழக அரசுதான் தங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்து தரவும் பாரம்பரிய பண்டிகைக்கு தயாரிக்கும் போகி மேளத் தொழிலை காக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.