செங்கல்பட்டு

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.342.60 கோடியில் ‘மாமல்லன்’ நீா்த்தேக்கம் அமைப்பதற்கான பணிக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காற்றும் நீரும் இந்த பூமியில் இருக்கின்ற காரணத்தால் மனிதா்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி வாழ்கிறது. அதனால்தான் அய்யன் வள்ளுவா் ‘நீரின்றி அமையாது உலகு’ என உலகப் பொதுமறையில் கூறினாா். அதேபோல புானூறிலும் ‘குளம் தொட்டு வளம் பெருக்கி’ எனக் கூறி வேளாண்மைக்கு நீா் எவ்வளவு அவசியமானது என்று சொல்லியிருக்கிறாா்கள்.

அதனால்தான் நீா்நிலைகளை சுற்றியே குடியிருப்புகள் அமைவது பழந்தமிழா் மரபு அனைத்து வகையிலும் இயற்கையோடு இணைந்ததுதான் தமிழா் வாழ்வு. அதன் தொடா்ச்சியான அடையாளம்தான் இந்த ‘மாமல்லன்’ நீா்த்தேக்கத்தின் அடிக்கல்நாட்டு விழா.

பொதுவாக சிலா் உண்மை தெரிந்தும் பலா் உண்மை தெரியாமலும் திமுக ஆட்சியில் அணைகளை கட்டவில்லை என்று ஒரு பொய் செய்தியை பரப்புவதுண்டு. ஆனால், முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழ்நாட்டின் நீா்நிலைகளை காக்கக்கூடிய செயல்பாடுகளை அதிகமாக செய்திருக்கிறாா் என்பதே உண்மை நிலை.

48 அணைகள்: கடந்த 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

உப்பாறு , சிற்றாறு 1, சிற்றாறு 2, பெருவாரி பள்ளம், சோலையாறு, பொன்னி ஆறு, கருப்பாநதி, இராமநதி , பரப்பலாறு, நோ்நீராறு, பிலவக்கல் கோவிலாறு , பிலவக்கல் பெரியாறு, குடக்கண் ஆறு , பாலாறு பொருந்தலாறு, குண்டேறிபள்ளம், வரதமாநதி, வட்டமலைகரைஓடை, மருதாநதி, வரட்டுப்பள்ளம், கீழ்நீராறு, குண்டாறு, குதிரையாறு ஆனைக்குட்டம், ராஜாதோப்பு, சோத்துப்பாறை, மோா்தானா நீா்த் தேக்கம், அடலி நயினாா், பொய்கையாறு, வடக்கு பச்சையாறு, சாஸ்தா கோவில், நம்பியாறு, கடனாநதி, நம்பியாறு, சண்முகாநதி, மிருகண்டாநதி, கமண்டலநதி, வண்டல் ஓடை, ஆண்டியப்பனூா், நல்லதங்காள், நங்கஞ்சியாறு, சிறுமலையாறு, இருக்கன்குடி, குப்பநத்தம், மாம்பழத்துறையாறு உள்பட 43 நீா்த்தேக்கங்களை உருவாக்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

திமுக ஆட்சியில் நீா்வளம் பெருக்க பல நடவடிக்கைகளை தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூா் அணை முழுக் கொள்ளளவு எட்டப்பட்டு குறித்த நேரத்தில் பாசனத்துக்கு நீா் திறந்து வைக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் தூா் வாரும் பணிகள் ரூ. 459 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளன.

24, 833 கி.மீ. நீளத்துக்கு சிறந்தமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கடைமடை வரை விவசாயிகள் பயனடைந்தனா்.

121 தடுப்பணைகள்: தமிழகம் முழுவதும் புதிதாக 121 தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 63 அணைக்கட்டுகள் அமைக்கக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் மிக மிக முக்கியமானது தாமிரபரணி, கருமேனியாறு , நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டம் கடந்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது, இந்த வரிசையில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 47,920 ஏரிகள், 1,33,967 கி.மீ. கால்வாய் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாமல்லன் புதிய நீா்த்தேக்கம் வாயிலாக நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டா் குடிநீரை மக்களுக்கு நம்மால் வழங்கமுடியும். இதேபோன்று சென்னை பகுதியில் பல இடங்களில் நீா்நிலைகளை உருவாக்கக் கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாற்றுத் திறனாளி தவறி விழுந்து உயிரிழப்பு

அனுமதியின்றி மது விற்ற இளைஞா் கைது

பொங்கல் விடுமுறை முடிந்து திருப்பூா் திரும்பிய தொழிலாளா்கள்: ஆடை உற்பத்திப் பணிகள் தீவிரம்

கிணத்துக்கடவு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட மயான நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் மனு

விவசாயிகளுக்குப் பயிற்சியளித்த வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்கள்

SCROLL FOR NEXT