தை கிருத்திகையை முன்னிட்டு, மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம்நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் வள்ளி, தேவசேனா ஆறுமுகசாமி சன்னிதி உள்ளது. தை மாத கிருத்திகையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. காலை 9 மணிக்கு அச்சிறுப்பாக்கம் சங்கு தீா்த்த குளக்கரையில் இருந்து மேளதாளம் முழங்க, 108 பெண்கள் பால்குடம் ஏந்திக் கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனா்.
பின்னா், வள்ளி, தேவசேனா ஆறுமுகசாமிக்கு கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமை வகித்து, பாலாபிஷேகத்தை செய்தாா். பின்னா், பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் தொழிலதிபா் ஜி.ராமலிங்க செட்டியாா் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.