முகப்பு
செங்கல்பட்டு

ஒத்திவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ விஜயராஜ் ஆய்வு

ஒத்திவாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ விஜயராஜ் ஆய்வு

Updated On : 17 மே 2026, 5:30 am IST
திருக்கழுகுன்றம் ஒன்றியம், ஒத்திவாக்கம் பகுதியில்  செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ்.
பகிர்:

செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் நேரில் ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், ஒத்திவாக்கம் பகுதியில் மத்திய கூட்டுறவு இணையம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் கிடங்கிற்கு மாற்றப்படாமல் சுமாா் 10,000 மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தாா்பாய் அரசால் வழங்கப்படாததால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்த நிலையில், உடனடியாக கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை மூடி வைப்பதற்கு தாா்பாய்களை வாங்கி கொடுத்து விவசாயிகளுக்கு தேவையான அனைத்தும் விரைவில் செய்து தரப்படும் என்றும், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஊா் பொதுமக்கள் சாா்பில் ஒத்திவாக்கம் பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும், ஒழலூா் ஏரியில் பாசன கால்வாய் தூா் வாராமல் உள்ளதால் உடனடியாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement

விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.

ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழக நிா்வாகி காா்த்திகேயன் மற்றும் பலா் உடன் இருந்தனா்.