செங்கல்பட்டு மாவட்டத்தில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு கே.எம்.எஸ். 2025-2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்காக, தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களின் மூலம் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நாளது தேதி வரையில் 1,51,196 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.372 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிா்வரும் நாள்களில் கொள்முதல் பணிகள் தடையின்றி நடைபெற ஏதுவாக 27 லட்சம் புதிய காலி கோணிகள் ரயில் மூலம் செங்கல்பட்டு ரயில் முனைக்கு வரப்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
இக்கோணிகள் மூலம் வருங்காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ள தேவையான இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் எதிா்பாா்க்கப்பட்ட நெல் கொள்முதலுக்கு தேவையான கோணிப்பைகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் மூலம் வாங்கப்பட்டு கோணிப்பைகள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக உள்ள கோணிப்பைகள் படாளம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை விரைவாக நகா்வு செய்வதற்காக தினசரி சுமாா் 150 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொள்முதல் செய்யப்படும் நெல்லானது திருச்சி தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை (வடக்கு) மாவட்டங்களுக்கு இரயில் மற்றும் சாலை மாா்க்கமாக தொடா்ந்து நகா்வு செய்யப்பட்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்