சுகாதாரச் சீர்கேட்டில் ஓட்டேரி
சென்னை, நவ.4: சென்னை ஓட்டேரியில் மயானத்தை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக அங்கு ஓட்டல் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி பெருகியிருப்பதோடு, ம
சென்னை, நவ.4: சென்னை ஓட்டேரியில் மயானத்தை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக அங்கு ஓட்டல் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி பெருகியிருப்பதோடு, மழைக் காலம் என்பதால் பெரும் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சிலர், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதால் இந்த சுகாதாரக் கேட்டை கண்டுகொள்வது இல்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஓட்டேரி மயானத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த இடத்தை, அப் பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து, ஓட்டல் கழிவுகளை அங்கு சேகரித்து அவற்றிலிருந்து தேவையானப் பொருள்களை பிரித்தெடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.
Advertisement
சென்னையில் உள்ள பல்வேறு பெரிய ஓட்டல்களில் இருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு இந்த இடத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. அக் கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேவையானப் பொருள்களை பிரித்தெடுத்துவிட்டு, மீதமாகும் உணவுக் கழிவை பெரிய பிளாஸ்டிக் பையில் கட்டி அந்தக் காலியிடத்தில் போடப்படுகின்றன.
கழிவுகளை பிரித்தெடுக்கும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த 30 பேர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கழிவுகள் கொட்டப்படுவதால், இப்போது மலைபோல் குப்பை குவிந்துள்ளது. இடம் போதாமல் சாலையிலும், ஓட்டேரி மயானத்திலும் அக் கழிவுகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் விரோத செயல்களால், அப் பகுதியில் கொசு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு போடப்படும் பிளாஸ்டிக் பைகளில் இருந்து கழிவுகள் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் அந்தத் தனியாரிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு, இந்தச் சமூக விரோதச் செயலுக்கு அனுமதி அளிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சுகாதார சீர்கேட்டை மாநகராட்சி உயர் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.