சென்னை- புது தில்லி இடையே சம்பிரதாயமாக இயக்கப்படும் 'துரந்தோ' எக்ஸ்பிரஸ் ரயில்
சென்னை, நவ. 24: சென்னை சென்ட்ரல்- புது தில்லி இடையே வாரம்தோறும் "துரந்தோ' அதிவிரைவு ரயில் சேவை சம்பிரதாயமாக இயக்கப்பட்டு வருகிறது. 2-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புப் பெட்டிகளும் ஏசி வசதி செய்யப
சென்னை, நவ. 24: சென்னை சென்ட்ரல்- புது தில்லி இடையே வாரம்தோறும் "துரந்தோ' அதிவிரைவு ரயில் சேவை சம்பிரதாயமாக இயக்கப்பட்டு வருகிறது.
2-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புப் பெட்டிகளும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயிலின் மொத்த இருக்கைகளில் (பெர்த்) பெரும்பாலான நாள்களில் அதிகபட்சமாக 40 முதல் 45 சதவீதம் வரை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
"பாயிண்ட் டூ பாயிண்ட்' சேவையாக இயக்கப்படும் இந்த ரயிலில் நவம்பர் 16-ம் தேதி மட்டும் தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (ஸ்லீப்பர்) 253 இருக்கைகளும், 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் 200 இருக்கைகளும் நிரப்பப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
23-ம் தேதி புறப்பட்ட துரந்தோ விரைவு ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 161 இருக்கைகள் காலியாக உள்ளன.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு வாரம் இரு முறை சேவையாக இயக்கப்படாததால் பயணிகளிடையே இந்த ரயில் சேவைக்கு போதிய வரவேற்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தவாறு, சென்னை சென்ட்ரல்- புது தில்லி (ஹஸ்ரத் நிஜாமுதின்) இடையே "துரந்தோ' ரயில் சேவை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தில்லிக்கு திங்கள்கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் புதன்கிழமைகளிலும் இந்த ரயில் வாரம்தோறும் இப்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் சேவை தொடக்க விழாவில், இந்த ரயில் வாரம்தோறும் கூடுதலாக இனி இருமார்க்கங்களிலும் முறையே வியாழன், சனிக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
ஆனால், இதுவரை இதற்கான உத்தரவை ரயில்வே துறை பிறப்பிக்காததால், இதுவரை வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதன்படி சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை புதுதில்லிக்கு சென்று சேருகிறது.
மறுமார்க்கத்தில் புதுதில்லியில் இருந்து இந்த ரயில் புதன்கிழமை புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமை வந்து சேருகிறது.
நித்திரையில் துரந்தோ ரயில் பெட்டிகள்... இதர நாள்களில் இந்த ரயில் பேசின் பிரிட்ஜ் யார்டில் "நித்திரையில்' ஓய்வெடுக்கிறது.
பச்சை, ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் பெட்டிகளை வேறு எந்த எக்ஸ்பிரஸ் ரயிலுடனும் இணைத்து இயக்க இயலாது.
இதனால், தினமும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
எனவே, பயணிகளின் நலன் கருதி இந்த ரயிலை வாரம் இரு முறை சேவையாக இயக்க ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரி வருகின்றனர்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ஏழைகள் ரதம் (கரீப் ரத்) ரயில்களுக்கும் போதிய வரவேற்பு இல்லை என ரயில்வே துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதே துரந்த் ரயில் சேவையை "பாயிண்ட் டூ பாயிண்ட்' சேவையாக இல்லாமல் முக்கிய நகரங்களில் நின்று செல்லுமாறு இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரி வருகின்றனர்.