முகப்பு
இந்தியா

போர் காரணமாக மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்க இந்திய விமானத் துறை அறிவுறுத்தல்!

இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக...

Updated On : 20 மார்ச், 2026 at 7:08 AM
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக வளைகுடா வான்வழியைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வளைகுடா நாடுகளின் வான்வழி, கடல்வழி போக்குவரத்துகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதி வான்வழி போக்குவரத்தைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்தியாவை ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவுடன் இணைக்கும் முக்கிய வான்வழித் தடங்களில் இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு நீண்ட தூர விமானங்களை இந்த வழித்தடத்தில் இயக்கிவந்த நிலையில் ஈரான் மற்றும் ஈராக் மீதான கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக மாற்றுப் பாதைகளில் தற்போது விமானங்களை இயக்கி வருகிறது. இதனால், விமானப் பயண நேரம் அதிகரித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, விமானப் பணி நேரம் தொடர்பான தளர்வுகளை இந்திய விமானத் துறை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்களுக்கு மேற்காசிய வான்வழி முக்கிய வழித்தடமாக உள்ளது. வான்வழிப் போக்குவரத்து சார்ந்த தடைகளைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களிடம் இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்துச் செயல்பாடுகளில் சவால்கள் இருப்பதைக் குறிப்பிட்ட அவர், “வளைகுடா நாடுகளில் உள்ள சில விமான நிலையங்கள் போர் காரணமாக சில நேரங்களில் திடீரென செயல்பாட்டை நிறுத்தி விடுகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளித்து விமானங்களின் நிலையான செயல்பாட்டை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

summary

DGCA flags West Asia risks, asks airlines to avoid Gulf airspace

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.