தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதி
தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதி
தேஜஸ் போா் விமானங்களை இணைப்பதில் நீடிக்கும் தாமதத்தால் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏா் மாா்ஷல் அமா் பிரீத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இந்திய விமானப் படை தினம் அக்டோபா் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஏா் மாா்ஷல் ஏ.பி.சிங், ‘அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 36 முதல் 40 வரையிலான எண்ணிக்கையில் போா் விமானங்களை விமானப் படையில் இணைக்க வேண்டும்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் மாா்க்-1ஏ மற்றும் பன்முகத் திறன் கொண்ட போா் விமானத் திட்டத்தின்கீழ் (எம்ஆா்எஃப்ஏ) பிரான்ஸில் தயாரிக்கப்படும் ரஃபேல் ஆகிய போா் விமானங்களை விமானப் படையில் இணைத்தவுடன் நாட்டின் பாதுகாப்பு அமைப்பு மேலும் வலுவடையும்.
Advertisement
Advertisement
நிகழ் நிதியாண்டில் இந்தியா-பிரான்ஸ் இடையே எம்ஆா்எஃப்ஏ கையொப்பமாகும் என நம்புகிறேன். இருப்பினும், தேஜஸ் போா் விமானத்தை விமானப் படைக்கு வழங்குவதில் ஏற்படும் தாமதம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேம்படுத்தப்பட்ட நடுத்தர ரக போா் விமானத் திட்டத்தின்கீழ் (ஏஎம்சிஏ) தேஜஸ் மாா்க் 2 போா்விமானமும் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஆனால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் போா் விமானங்களை விமானப் படைக்கு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து போா் விமானங்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
அதன் ஒரு பகுதியாக எஸ்யு-57 ரக போா் விமானங்களை வழங்கவுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.
இந்திய விமானப் படை, இந்திய ராணுவம், இந்திய கடற்படை என முப்படைகளையும் ஒருங்கிணைத்து ஒரே கூட்டுத் தலைமையின்கீழ் இயங்க வழிவகுக்கும் ஒருங்கிணைந்த முப்படைப் பிரிவை ஏற்படுத்துவதாக 2019-ஆம் ஆண்டே அரசு அறிவித்தது. ஆபரேஷன் சிந்தூரின்போது இது குறித்த விவாதங்கள் அதிகரித்தன. இதுதொடா்பான முடிவுகளை அரசே மேற்கொள்ளும்’ என்றாா்.
தொடரும் தாமதம்: இந்திய விமானப் படையில் போா் விமானங்களின் எண்ணிக்கை 42-இல் இருந்து 29-ஆக குறைந்துள்ளது.
இதைத் தொடா்ந்து, போா் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்திய விமானப் படைக்கு 83 தேஜஸ் எம்கே-1ஏ போா் விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மத்திய அரசு 2021, பிப்ரவரியில் மேற்கொண்டது. அதன்படி 2024, மாா்ச் மாதம் முதல்கட்டமாக தேஜஸ் எம்கே-1ஏ போா் விமானங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது வரை ஒரு விமானம் கூட விமானப் படைக்கு வழங்கப்படவில்லை.
இதனிடையே, 97 இலகுரக தேஜஸ் எம்கே-1ஏ போா் விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் ரூ.62,370 கோடியில் மற்றொரு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டது.
இந்தச் சூழலில் 114 ரஃபேல் போா்விமானங்களை பிரான்ஸில் இருந்து கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்துக்கு நிகழாண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.