சென்னை

மின்திருட்டை தவிர்க்க உதவும் ஜி.ஐ.எஸ். முறை!

சென்னை, டிச. 12: தமிழகத்தில் மின் திருட்டு மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் நூறு கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவற்றை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிய ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி தகவல் அமைப்பு வர

ஆர். ஆதித்தன்

சென்னை, டிச. 12: தமிழகத்தில் மின் திருட்டு மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் நூறு கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவற்றை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிய ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி தகவல் அமைப்பு வரைபடத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தயாரித்துள்ளது.

முதல்கட்டமாக சென்னை அண்ணாநகரில் இந்த புவி தகவல் அமைப்பு வரைபடம் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. மின் விபத்துகளைத் தடுக்கவும், மின் திருட்டுகளைக் கண்டறியவும், எதிர்காலத்தில் மின்சாரத்தை சேமித்திடவும் இந்த புவி தகவல் அமைப்பு வரைபடம் முக்கிய பங்கு வகிக்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், 2006-ல் சென்னை அண்ணா நகரில் சோதனை முயற்சியாக புவி தகவல் அமைப்பு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்தப் பணிக்கான பொறுப்பு ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் எவ்விதப் பணியையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியமே, புவி தகவல் அமைப்பு தயாரிக்க களமிறங்கியது. 2008-ல் தொடங்கிய இந்தப் பணி, 2010 ஜூனில் முடிக்கப்பட்டது.

புவி தகவல் அமைப்பில் மின் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் இணைப்பு பெட்டிகள், மின் நுகர்வோரின் வீட்டு முகவரியுடன் கூடிய தகவல்கள் மிக துல்லியமாகச் சேகரிக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மின் வாரியத்தின் புவி தகவல் அமைப்பு அதிகாரிகள் கூறியது:  தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், சோதனை முயற்சியாக அண்ணா நகரில் உள்ள 8 மின் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின்வாரிய சொத்துகள், நுகர்வோர் குறித்த விவரங்கள் செயற்கைக்கோள் பட உதவியுடன் திரட்டப்பட்டுள்ளன.

அண்ணா நகர் வடக்கு, அண்ணா நகர் மேற்கு, ஜெ.ஜெ.நகர் வடக்கு, ஜெ.ஜெ.நகர் தெற்கு, ஜெ.ஜெ.நகர் மேற்கு, அண்ணாநகர் சென்ட்ரல், திருமங்கலம், செனாய் நகர் என 8 மின் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட தெருக்கள், அதில் உள்ள நுகர்வோரின் வீடு, முகவரி உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

மின் தடை பிரச்னை ஆய்வு, மின் இருப்பு குறித்த தகவல்கள் ஆய்வு, மின்சார தேவைக்கேற்ப புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க அறிவுறுத்துவது என பலவற்றை எளிதாகக் கணக்கிட முடியும். அதேபோல மின்சார விபத்துகளையும் தவிர்க்க முடியும்.

இதுதவிர தேசிய தகவல் மையம் (நிக்) சார்பில் சென்னை மாநகராட்சி, காவல்துறை, குடிநீர் வாரியம், தொலைபேசி துறை, மின்சார வாரியம் என ஒருங்கிணைந்த புவி தகவல் அமைப்பு வரைபடம் தயாரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது. இப்போது நிக் சார்பில், பெரியமேடு பகுதியில் வார்டு 47- பகுதியை ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் துல்லியமாகக் கணக்கிட்டு, அதை வரைபடமாகத் தயாரித்து வருகிறோம்.

 இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் மின் துறை சார்பில், தமிழகத்தில் சுமார் 110 இடங்களில் புவி தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. சென்னை குடிநீர் வாரியம், தொலைபேசி துறை, நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளைத் தோண்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போது, மின்கேபிள்கள் சேதமடைகின்றன. இதனால் சில நேரங்களில் மின் சேவை நிறுத்தப்படுகிறது.

இனிமேல் புவி தகவல் அமைப்பு மூலம் இந்த மாதிரியான பிரச்னைகள் தவிர்க்கப்படும். எந்த இடத்தில் மின்கேபிள் புதைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, குழி தோண்ட இதர துறையினர் அறிவுறுத்தப்படுவர்.

அதேபோல, புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்வோருக்கு தேவைப்படும் மின்கேபிள்கள், சாதனங்கள் ஆகியவை குறித்து எளிதாகக் கணக்கிட முடியும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT