நல்ல உணவு; சுகாதாரம்; பாதுகாப்பான கட்டடம் நிறைவேறுமா ஆதிதிராவிட மாணவர் எதிர்பார்ப்பு?
சென்னை, டிச. 23: நல்ல உணவு, சுகாதாரம், பாதுகாப்பான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன. இந்த கோரிக்கைகளை வலியுற
சென்னை, டிச. 23: நல்ல உணவு, சுகாதாரம், பாதுகாப்பான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நீண்ட நாள்களாக மனுக்கள் மூலமும், போராட்டங்கள் மூலமும் வலியுறுத்தி வந்தபோதும், அரசு அசைந்து கொடுக்காமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பதோடு, தொடர் போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறை கூறுகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஏழை ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி படிப்பதற்காக ராயபுரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், வில்லிவாக்கம் மற்றும் போரூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகள் என 21 ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
Advertisement
இந்த விடுதிகள் அனைத்தும் ஆதிதிராவிட நலத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
சைதாப்பேட்டை விடுதியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், நந்தனத்தில் 250 பேர், வில்லிவாக்கம் விடுதியில் 250 மாணவர்கள் என ஒவ்வொரு விடுதியிலும் நுற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்த விடுதிகளில் பெரும்பாலனவற்றில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளே இல்லை என மாணவர்கள் குறை கூறுகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் மாணவர்கள் நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை விடுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தால், சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ஒரு சில விடுதிகளை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் தமிழரசி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு செய்யப்போகிறார் என்பதை அறிந்தவுடன், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட சில விடுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதும் விடுதிகளில் முழுமையான தூய்மையை ஊழியர்களால் மேற்கொள்ள முடியவில்லை. சைதாப்பேட்டை விடுதியில் இரண்டு கழிவறைகள் பயன்படுத்த முடியாத வகையில் அசுத்தமாகி உள்ளன.
இதுகுறித்து அங்கு தங்கியிருக்கும் ஒரு மாணவர் கூறியது: அமைச்சர் ஆய்வு என்றவுடன், விடுதியில் உள்ள அனைத்து கழிவறைகளும் காலை முதல் சுத்தப்படுத்தப்பட்டன. இருந்தபோதும், இரண்டு கழிவறைகளை ஊழியர்கள் சுத்தம் செய்யவில்லை. இதை மறைக்க அங்கு யாரும் செல்ல முடியாத வகையில் சின்டக்ஸ் டேங்க் மூலம் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
500 மாணவர்கள் உள்ள இந்த விடுதியில், தூய்மைப் பணியாளர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு தங்கியுள்ளவர்கள் அனைவரும் திறந்த வெளியிலேயே குளித்து வருகிறோம். அந்த இடத்தில் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் விடுதியில் தங்கியிருக்கும் 50 பார்வையற்ற மாணவர்களும், தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
நந்தனம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், விடுதி கட்டடம் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. விடுதியின் முதல் மாடியில் அறைக்கு அருகிலேயே சுவர் இடிந்து பாதுகாப்பற்ற முறையில் திறந்து கிடக்கிறது. வில்லிவாக்கம் விடுதியில், உள்ளேயும் வெளியேயும் கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. கழிவறைகளும் சுகாதரமின்றி காணப்படுகின்றன.
நல்ல உணவு: இந்தக் குறைபாடுகள் ஒருபக்கம் இருந்தாலும் நல்ல உணவு வழங்கவேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. விடுதியில் சமைத்துத் தரப்படும் உணவைச் சாப்பிடவே முடிவதில்லை. பசிக்காகச் சிறிது சாப்பிடுவோம், எஞ்சியுள்ளதை வேறு வழியின்றி குப்பைத் தொட்டியில் கொட்டிவிடுவோம் என்கின்றனர் மாணவர்கள்.
நந்தனம், வில்லிவாக்கம் ஆகிய இரண்டு விடுதிகளிலும், குப்பைத்தொட்டிகள் நிறைய சாப்பாடு கொட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து நந்தனம் விடுதி மாணவர் கூறியது: விடுதியில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சாப்பாடு என ஒரு பட்டியல் உள்ளது. ஆனால், இதுவரை இந்தப் பட்டியலில் உள்ளபடி சாப்பாடு போட்டதில்லை. தினமும் மூன்று வேளையும், சாப்பாடும் சாம்பாரும்தான்.
இதை வாயில் வைக்க முடியாது என்பதால் பெரும்பாலும் காலையில் சாப்பிட மாட்டோம். மதியம், இரவு நேரங்களில் மட்டும் வேறு வழியின்றிச் சாப்பிடுவோம். இருந்தாலும் முழுமையாகச் சாப்பிட முடியாது என்றார்.
உணவுக்கானத் தொகை உயர்த்தப்படுமா?
நல்ல உணவே மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதைச் சரி செய்தாலே மாணவர்களை அமைதிப்படுத்தி விடலாம். இதற்கு உணவுக்கான தொகையை அரசு உயர்த்தித் தரவேண்டும் என்கின்றனர் விடுதி காப்பாளர்கள்.
இதுகுறித்து ஒரு விடுதிக் காப்பாளர் கூறியது: ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவருக்கு மாதம் ஒன்ருக்கு ரூ.550-ம், பள்ளி மாணவருக்கு ரூ.450-ம் உணவு தொகையாக தமிழக அரசு வழங்குகிறது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மாணவர் ஒருவருக்கு சராசரியாக ரூ.16.50 தான் கிடைக்கிறது.சமையல் எரிவாயு, காய்கறி, வெங்காயம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், மூன்று வேளை சாப்பாட்டுக்கு ரூ.16.50 போதாது.
இந்தத் தொகைக்கு பட்டியலில் உள்ளபடி விதவிதமாக சாப்பாடு போட முடியாது. விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு மாணவர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 வீதம் உணவுக்கான தொகையை தமிழக அரசு உயர்த்தித் தரவேண்டும்.
இல்லையெனில் சத்துணவு திட்டத்துக்கு வழங்குவதுபோல், தமிழக அரசே உணவுப் பொருள்களை நேரடியாக வழங்கவேண்டும். அனைத்து விடுதிகளின் சமையல் பணியிலும், சுகாதாரப் பணியிலும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இதை உடனடியாக அரசு நிவர்த்தி செய்யவேண்டும்
என்றார்.