செல்போன் மூலம் நோய் குறித்த தகவல்கள்
சென்னை, ஜூலை 7: நோய்கள் குறித்த தகவல்களை செல்போன் மூலம் மாவட்ட கணினி மையத்துக்கு அனுப்பும் மாதிரி திட்டத்தை அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிர
சென்னை, ஜூலை 7: நோய்கள் குறித்த தகவல்களை செல்போன் மூலம் மாவட்ட கணினி மையத்துக்கு அனுப்பும் மாதிரி திட்டத்தை அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறியதாவது:
புதிய நோய்கள் பரவுகிறபோதும், மக்கள் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படும்போதும் அது பற்றி தகவல் தெரிந்து, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க கால தாமதம் ஆகிறது.
Advertisement
தற்போதைய நடைமுறைப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இருக்கும் சுகாதார செவிலியர்கள், நோயாளிகளிடம் இருந்து நோய் அறிகுறிகள் பற்றிய தகவல்களைப் பெற்று, அதை காகிதங்களில் எழுதி அதை மாவட்ட தலைமையகத்துக்கு அனுப்புவார்கள்.
இவ்வாறு அனைத்து மையங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, நோயின் தன்மை, அதைக் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.
அதன் பின்னர், மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சுகாதார மையங்களுக்கு மாவட்ட தலைமையகம் அனுப்பி வைக்கும்.
அதன் பின்னர் நோய் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறையை மேற்கொள்ள அதிக நாள்கள் ஆகின்றன.
எனவே, கால தாமதம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னை ஐ.ஐ.டி., தேசிய உயிரி அறிவியல் மையம், தமிழக சுகாதாரத் துறை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து செல்போன் உதவியோடு கூடிய மாதிரி திட்டம் ஒன்றை வகுத்துள்ளன.
இதன்படி, சுகாதார மையங்களில் நோயாளிகள் அளிக்கும் தகவல்கள் செல்போன் மூலம் உடனுக்குடன் கணினி மையத்துக்கு அனுப்பப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
இந்த மாதிரி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 துணை சுகாதார நிலையங்களில் 2008 ஜூலை முதல் செயல்படுத்தப்பட்டன. அங்குள்ள 200 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் எதிர்பார்த்த பலனை அளித்துள்ளது. இந்தத் திட்டம் காகித வழி தகவல் பரிமாற்றத்தைவிட விரைவானது என நிரூபணமாகியது. திட்ட காலத்தில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா நோய்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தை சிவகங்கை மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்த சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றார்.
சிவகங்கை மாவட்டத்தின் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரகுபதி, தேசிய உயிரி அறிவியல் மைய இயக்குநர் விஜயராகவன், திட்ட உதவியாளர் சுமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.