சென்னை

பராமரிப்பில்லாத பனந்தோப்பு ரயில்வே குடியிருப்பு

சென்னை, செப். 5: அயனாவரம் அருகே உள்ள பனந்தோப்பு ரயில்வே குடியிருப்பு பராமரிக்கப்படாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சென்னையில் எழும்பூர், கோடம்பாக்கம், மாம்பலம், பரங்கிமலை, சானட்டோரியம், தாம்பரம்

ச. குமரன்

சென்னை, செப். 5: அயனாவரம் அருகே உள்ள பனந்தோப்பு ரயில்வே குடியிருப்பு பராமரிக்கப்படாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

சென்னையில் எழும்பூர், கோடம்பாக்கம், மாம்பலம், பரங்கிமலை, சானட்டோரியம், தாம்பரம், அன்னனூர், வண்ணாரப்பேட்டை, பனந்தோப்பு ஆகிய இடங்களில் ரயில்வே பணியாளர்கள், அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை ரயில்வே கோட்டத்தின் பராமரரிப்பில் உள்ள வீடுகளுக்கு, ஊழியர்களின் பணித் தகுதி அடிப்படையில் அவர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் ரூ. 2,465 முதல் ரூ. 7,000 வரை வாடகை பிடித்தம் செய்யப்படுகிறது

இந்தக் குடியிருப்புகள் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாவதால். பெரும்பாலான வீடுகள் போதிய பராமரிப்பில்லாமல் சேதமுற்று வருகின்றன. குறிப்பாக, பனந்தோப்பு ரயில்வே குடியிருப்பில் வசிப்போர் மிகுந்த அவல நிலையில் உள்ளனர். இந்தக் குடியிருப்பில் உள்ள சுமார் 1,000 வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

கால்நடை வளர்ப்பு: இந்தக் குடியிருப்புகளை ரயில்வே அலுவலர் சிலரின் ஆதரவுடன் அன்னியர்களும் ஆக்கிரமித்துள்ளனர். இவர்களில் சிலர் கறவை மாடுகள் முதல் பன்றிகள் வரை கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப் பகுதியில் தேங்கும் கால்நடைக் கழிவுகள் மற்றும் கழிவு நீர் இதே குடியிருப்பில் உள்ள பாழடைந்த குடிநீர் கிணற்றுக்கு திருப்பிவிடப்படுகிறது.

இதனால், குடிநீர்க் கிணறு கழிவுநீர் கிணறாக மாறியுள்ளது. இதனால், அருகில் உள்ள குடிநீர்க் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் வாந்தி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் மின்திருட்டு: இந்தக் குடியிருப்பில் உள்ள ரயில்வே மைதானம் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மின்திருட்டு செய்து, ஒளிவெள்ள விளக்குகளைப் பயன்படுத்தி, இரவில் கிரிக்கெட், கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் இந்தக் கும்பல் ஈடுபடுவது தொடர்கிறது.

குடியிருப்பில் உள்ள தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளன. தெரு விளக்குகளும் எரியதாதால் மிகவும் பின்தங்கிய குடியிருப்பாக இது மாறிவிட்டது. வீடுகளுக்கு இடையே முள்புதர்கள் மண்டியுள்ளதால், பாம்புகள் படையெடுப்பும் அவ்வப்போது தொடர்கிறது. ஒதுக்கிய காடுகள் போல் இந்தக் குடியிருப்பு ஓரங்கட்டப்பட்டுள்ளது.

இந்க் குடியிருப்புக்கு முழுமையான சுற்றுச் சுவர்கள் எழுப்பப்படவில்லை. இதனால், சமுக விரோதிகளின் புகலிடமாகவும் மாறியுள்ளது.

குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்: வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியுள்ளதால், வேறு வழியின்றி ரயில்வே அலுவலர்கள் "நித்ய கண்டம், பூரண ஆயுசு' என்ற சகிப்புத் தன்மையுடன் வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பலர் விரக்தியடைந்து குடியிருப்புகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஒரே மாதத்தில் இரு முறை ரயில்வே உயர் அதிகாரிகள் இந்தக் குடியிருப்பில் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தபோதும் கிணற்றில் போட்ட கல்லை போல எந்தவித பயனும் இல்லை என்கின்றனர் குடியிருப்புவாசிகள். ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அடிப்படை மற்றும் சுகாதார வசதி திட்டங்களின் பயன்களைப் பெற முடியாத துரதிர்ஷ்ட நிலைக்கு ரயில்வே அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், இந்தக் குடியிருப்புகள் தீவுச் சிறைச்சாலைகளைப் போல தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பும் கறுப்பும்!

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க விரும்பும் திலக் வர்மா!

இலங்கையில் பாகிஸ்தானின் மீட்புப்பணிகளை முடக்க இந்தியா முயற்சி? -பாக். குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

SCROLL FOR NEXT