புளியந்தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை
சென்னை, செப். 13: சென்னை புளியந்தோப்பு பேசின் பாலம் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் விடுதலையான சக்திவேல் (37) மர்ம நபர்களால் திங்கள்கிழமை காலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சென்னை, செப். 13: சென்னை புளியந்தோப்பு பேசின் பாலம் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் விடுதலையான சக்திவேல் (37) மர்ம நபர்களால் திங்கள்கிழமை காலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது குறித்த விவரம்:
புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Advertisement
பேசின் பாலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சக்திவேல் திங்கள்கிழமை காலை புறப்பட்டுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் எதிரில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சக்திவேலை சுற்றி வளைத்து அந்த 3 பேரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினராம்.
இதையடுத்து அங்கிருந்து அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சக்திவேலை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சக்திவேல் உயிரிழந்தார். இது தொடர்பாகத் தகவல் அறிந்து வட சென்னை போலீஸ் இணை கமிஷனர் ஷேசசாயி, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு கொலையாளிகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்தினர்.
காரணம் என்ன?
சென்னை வேப்பேரி பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் இரும்பு விற்பனை நிறுவனப் பிரதிநிதி ஒருவரிடம் போலீஸôர் போல நடித்து 50 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சக்திவேல் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
இதில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த சக்திவேலுவுக்கும் அதே வழக்கில் கைதான வேறு சிலருக்கும் இடையே வழிப்பறி மூலம் கிடைத்த பணத்தைப் பங்கிடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாம்.
இந்தத் தகராறு காரணமாக எதிர் பிரிவினர் சக்திவேலை கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது என போலீஸôர் தெரிவித்தனர்.
இது தவிர சக்திவேலின் சகோதரி ரமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் இடையே கஞ்சா வியாபாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம். இதில் ரமணிக்கு ஆதரவாக இறங்கிய சக்திவேல், வரலட்சுமியை தாக்கினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த வரலட்சுமியின் ஆதரவாளர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸôருக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில், சக்திவேல் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் அறிந்த அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் புளியந்தோப்பு நரசிங்கபுரத்தில் மாதவன் என்பவருக்கு சொந்தமான கேபிள் டிவி அலுவலகம் மற்றும் சில கடைகளை சூறையாடினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.