சென்னை, டிச. 4: சென்னை வேப்பேரியில் செயல்படாமல் இருக்கும் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை (டிராஃபிக் பார்க்) வேறு இடத்தில் அமைக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சென்னையில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5,500 சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு 650 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இறப்பவர்களில் 33 சதவிகிதம் பேர் சாலை ஓரம் நடந்து செல்வோரும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் என காவல்துறை புள்ளி விவரம் கூறுகிறது. இந்த விபத்துகளில் இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினரே என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாகன ஓட்டிகள் கவனக்குறைவு மட்டுமன்றி, போக்குவரத்து விதிமுறை மீறலும், போக்குவரத்து விதிமுறை பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணமாகும். இதனால், வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னைப் பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு எடுத்து வருகிறது.
அண்மைக்காலமாக இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் காவல்துறை அபராதம் விதித்து வருகிறது. அதேநேரம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் காவல்துறை நடத்துகிறது.
சிதையும் டிராஃபிக் பார்க்: வேப்பேரி ஈ.வெ.ரா. சாலையில் பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இருந்த போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக செயல்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா செயல்படாமல் சிதைந்து வருகிறது. அதை வேறு இடத்தில் அமைப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. போக்குவரத்து கூடுதல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தில், கடந்த 2007-ம் ஆண்டு புதிதாக பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2008-ம் ஆண்டு புதிய ஆணையர் அலுவலகத்தின் கட்டடப் பணி தொடங்கியது. அப்போது அங்கு ஏற்கெனவே செயல்பட்டு வந்த கூடுதல் ஆணையர் அலுவலகம் கீழ்ப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், அந்த அலுவலகத்தில் செயல்பட்டு வந்த போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா அங்கேயே இருந்தது.
அது செயல்பட்டபோது, மாநகரில் உள்ள பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை விளக்கப்பட்டது. இதற்காக போக்குவரத்து விதிமுறை குறித்த விளக்கப் பலகைகள், சிக்னல்கள், சாலையில் வைக்கப்படும் சிக்னல் பலகைகள் ஆகியன வைக்கப்பட்டிருந்தன. மேலும் சிக்னல்களுக்கு ஏற்ப எவ்வாறு செயல்பட வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பது குறித்து ஒரு மாதிரி கார் இயக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அங்கு போக்குவரத்துப் பிரிவு காவலர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இளைய தலைமுறையினர் சாலை விபத்துகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்துகொள்வதற்கும் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா பயன்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பூங்கா செயல்படாமல் இருப்பது மாணவர்களுக்கு பெரிய இழப்பு என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை வேறு இடத்தில் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.