முகப்பு
சென்னை

திறப்பு விழா நடந்து 5 மாதங்களாகியும் திறக்கப்படாத வணிக வளாகம்: நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

சென்னை : சென்னை அயனாவரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்காக ரூ. 1.19 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம், திறப்பு விழா நடந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் பூட்டப்பட்டுள்ளது.  இதனால், பாலவாயல் பிரதான சாலையில் (மா

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:31 PM
பகிர்:

சென்னை : சென்னை அயனாவரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்காக ரூ. 1.19 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம், திறப்பு விழா நடந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் பூட்டப்பட்டுள்ளது.

 இதனால், பாலவாயல் பிரதான சாலையில் (மார்க்கெட் தெரு) 150-க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் தங்களது பிரச்னைக்கு, "விடியலை' எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

 அயனாவரம் பாலவாயல் பிரதான சாலையில் கடைகளுக்கு முன்பாக நடைபாதை வியாபாரிகள் மர மேடைகளை அமைத்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.

 பொதுமக்கள் அவதி தீருமா?

 நடைபாதை வியாபாரிகள் சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளதால், இந்தச் சாலை ஒற்றையடிப் பாதையைப் போல் குறுகிவிட்டது.

 இதனால், இந்தப் பகுதியில் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் சொந்தமாகவும், வாடகைக்கும் கடைகளை நடத்தும் வியாபாரிகள் பலர் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக நீண்டகாலமாக மாநகராட்சியிடம் புகார் செய்து வந்தனர்.

 பாலவாயல் சாலையில் நெரிசல், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், இந்தப் பகுதியில் உள்ள சோலை தெரு, வீராசாமி தெரு, பால் டிப்போ தெரு, ராமசாமி தெரு, பழனி ஆண்டவர் தெரு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் மக்கள் ரயில் நிலையம் செல்லவும், கொன்னூர் நெடுஞ்சாலைப் பகுதிக்குச் செல்லவும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

 இந்த பிரதான சாலை வழியாகத்தான் சடலங்களை அடக்கம் செய்ய மயான பூமிக்கு எடுத்துச் செல்ல முடியும். ஆனால், நெரிசல் காரணமாக இந்தச் சாலையில் வாகனங்கள் கூட செல்லவே முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றார் சமூகப் பணியாளர் ராமதாஸ்.

 இதுகுறித்து பல முறை வலியுறுத்தியதையடுத்து பொதுமக்கள், அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி செவிசாய்த்தது. இதையடுத்து, பழைய மார்க்கெட் இருந்த பகுதியையொட்டி ரூ. 1.19 லட்சம் செலவில் 2 தளங்கள் கொண்ட நீண்ட வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

 இந்த வணிக வளாகத்தை கடந்த 13.9.2010-ல் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 இதனால், தங்களது 40 ஆண்டு கால பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாக நினைத்து நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 ஆனால், திறப்பு விழா நடந்து 5 மாதங்கள் ஆகியும் இந்த வணிக வளாகம் திறக்கப்படாததால் இவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே!

 அடிப்படை வசதிகள் இல்லை!

 இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் எழுமலை கூறியதாவது: அயனாவரம் பாலவாயல் சாலை சந்தைப் பகுதியில் 350-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.

 இந்தநிலையில் நடைபாதை வியாபாரிகளுக்காக வணிக வளாகத்தைக் கட்ட மாநகராட்சி முன்வந்தது. இதையடுத்து, கீழ்தளம், தரை தளம், முதல் தளம் என 3 தளங்களுடன்

 கூடியதாக கட்டட வரைபடம் மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது. வியாபாரிகளுக்கு

 கான்கிரீட் மேடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டன.

 ஆனால், மாநகராட்சி இதைப் புறக்கணித்து திருமண மண்டபத்தின் சமையல் கூடம் போல 2 தளங்களுடன் இந்த வணிக வளாகத்தைக் கட்டியுள்ளது. இதற்கு 3 வாயில்கள் இருந்தபோதும் குறுகலாக உள்ளதால் அவசரகாலத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை உள்ளது.

 கழிவுநீர் வடிகால், கழிப்பறைகள், தீத்தடுப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

 குலுக்கல் முறையில்...

 இந்த வணிக வளாகத்தில் 364 கடைகளுக்கு இடம் ஒதுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. இதற்காக இதுவரை 170-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் புகைப்படத்துடன் விண்ணப்பித்துள்ளனர் என்றார் எழுமலை.

 இந்தநிலையில், குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு கடைகளை அமைக்க இடம் ஒதுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், அடிப்படை வசதிகள் போதிய அளவில் நிறைவேற்றப்படாததால் நடைபாதை வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 இதில் சிக்கல் நீடிப்பதால், இதுவரை கடைகள் அமைக்க யாருக்கும் அனுமதி வழங்காததால் இந்த வணிக வளாகம் பூட்டப்பட்டு கிடக்கிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.