நூலகம் ஒருபுறம்; அலுவலகம் வேறுபுறம்: தவிப்பில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
சென்னை,பிப்.22: புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய தலைமைச் செயலகம் காலி செய்யப்பட்டு வருவதால், எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம். தமிழுக்கு செ
சென்னை,பிப்.22: புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய தலைமைச் செயலகம் காலி செய்யப்பட்டு வருவதால், எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு மே மாதம் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது. இதற்கென தனி அலுவலகமாக கடற்கரைச் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தை தமிழக அரசு ஒதுக்கித் தந்தது. நிறுவனத்தின் ஆட்சிமன்றக் குழுத் தலைவராக முதல்வர் கருணாநிதி உள்ளார்.
முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் பணிகள், புத்தகங்கள் தயாரிப்பு, ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்தும் வேலைகள் என தமிழாய்வு நிறுவனத்தில் தொடர் பணிகள் நடந்து வருகின்றன. முனைவர் பட்ட ஆய்வுப் பணிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை என்ற அளவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழாய்வுக்காக தொடர்ந்து பல்வேறு பணிகள் நடைபெறும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு ஆய்வு மாணவர்கள், தமிழறிஞர்கள் என அனைவரும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பாலாறு இல்லத்தில் போதிய இடம் இல்லை என்றும், மாற்று இடம் தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பான வேண்டுகோள், முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆட்சிமன்ற குழுக் கூட்டத்திலும் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டப் பேரவை மண்டபத்தில் தமிழாய்வு நூலகம் செயல்படும் என்றும், கோட்டையின் பிரதான கட்டடம் முழுக்க தமிழாய்வு நிறுவனத்துக்கே ஒதுக்கப்படும் எனவும் முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.
திடீர் முடிவு: இதைத் தொடர்ந்து, பழைய சட்டப் பேரவை மண்டபத்தில் தமிழாய்வு நூலகம் அமைக்கும் பணிகள் முடிவுற்றன. அங்கு நூலகம் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதேசமயம், அலுவலகம் மற்றும் இதர பணிகள் அனைத்தும் பாலாறு இல்லத்திலேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டடம் முழுவதும் தமிழாய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்ற நிலையில் தமிழக அரசின் இப்போதைய நடவடிக்கை அங்குள்ள ஆய்வு மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
காரணம், கோட்டையை தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் ஒப்படைக்க அரசு
முயற்சித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒப்படைக்கும் பட்சத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
ஆமை வேகத்தில் கட்டுமானப் பணி: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் செல்லும் வழியில் பெரும்பாக்கம் என்ற இடத்தில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இந்தப் பணிகளை மத்திய அரசின் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், உரிய காலத்தில் அங்கு கட்டடம் எழுப்பப்பட்டு தமிழாய்வு நிறுவனம் அங்கு செயல்படுவது கேள்விக் குறியாகி உள்ளது.
நிரந்தர இடமும் இல்லை: இப்போது இருக்கும் இடமும் இல்லை என்ற நிலையில் எங்கு செல்வது என்ற கேள்விக்குறியுடன் நிர்கதியில் நிற்கிறது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.