முகப்பு
சென்னை

ஆய்வுப் படிப்பு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்

சென்னை, பிப். 23: ஆய்வுப்படிப்பு முடிவுகள் அறிவிப்பதில் நீடித்து வந்த தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க புதிய திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் மூ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:05 AM
பகிர்:

சென்னை, பிப். 23: ஆய்வுப்படிப்பு முடிவுகள் அறிவிப்பதில் நீடித்து வந்த தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க புதிய திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரை அளித்த 6 மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி (கிரீன் பாக்ஸ்), மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து பல்வேறு புகார்களை மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

ஆராய்ச்சிக் கட்டுரைகளை அளித்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகும்கூட, முடிவுகளை பல்கலைக்கழகம் அறிவிப்பதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தப் புகார்களை ஆய்வுசெய்த சென்னைப் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரை அளித்த 6 மாதங்களுக்குள் வெளியிட புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம்: ஆராய்ச்சிப் படிப்புகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தவுடன், அதை ஆய்வு செய்பவர்களின் பட்டியலை அவருடைய வழிகாட்டி (கெய்டு) பல்கலைக்கழகத்துக்கு அளிக்க வேண்டும். அந்தப் பட்டியலிலிருந்து ஆய்வு செய்பவர்களை பல்கலைக்கழகம் தேர்வு செய்யும்.

சில வழிகாட்டிகள் ஆய்வு செய்பவர்களின் பட்டியலை அளிக்க ஓராண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்கின்றனர். இதுபோல் ஆய்வாளர்கள் கட்டுரையை ஆய்வு செய்து முடிவை தெரிவித்தவுடன் தன்னுடைய மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டு இறுதி மதிப்பெண்ணை, வழிகாட்டி பல்கலைக்கழகத்துக்கு வழங்கவேண்டும். இந்த இறுதி மதிப்பெண்ணை பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதிலும் வழிகாட்டிகள் தேவையற்ற தாமதம் செய்கின்றனர்.

பல்வேறு காரணங்களால் ஆராய்ச்சி மாணவர் வழிகாட்டியை மாற்ற முனையும்போது, அவர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்குவதற்கும் வழிகாட்டிகள் இழுத்தடிப்பு செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.

இதுபோன்ற காரணங்களால் ஆராய்ச்சி மாணவர்களுக்கான முடிவுகளை வெளியிடுவதில் பல்கலைக்கழகத்துக்கும் தேவையற்ற தாமதம் ஏற்படுகின்றது. இந்தத் தேவையற்ற தாமதத்தை போக்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையை பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பிக்கும்போதே, கட்டுரை ஆய்வாளர்களின் பட்டியலையும் மாணவரின் வழிகாட்டி சமர்ப்பித்துவிட வேண்டும். அவ்வாறு பட்டியலை வழிகாட்டி சமர்ப்பிக்கவில்லையெனில், கட்டுரை சமர்ப்பிக்கவும் அனுமதி மறுக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட ஆய்வாளர்கள் கட்டுரையை ஆய்வுசெய்த பின் அதற்கான முடிவை, வழக்கம்போல் வழிகாட்டியிடம் சமர்ப்பிப்பதைத் தவிர்த்து, நேரடியாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளரிடம் தெரிவிக்கவேண்டும். பின்னர் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சம்பந்தப்பட்ட வழிகாட்டியை வரவழைத்து மாணவரின் கட்டுரைக்கான இறுதி மதிப்பெண்ணை பெற்றுக்கொள்வார். இது உடனடியாக முடிவு வெளியிட வழிவகுக்கும்.

வழிகாட்டியை மாற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தலைமையில், பல்கலைக்கழக டீன் (ஆராய்ச்சி), சம்பந்தப்பட்ட வழிகாட்டி மற்றும் மாணவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, மாணவரின் கோரிக்கை நியாயமானதாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக அவருக்கு வழிகாட்டி மாற்றித் தரப்படும்.

இந்தப் புதிய நடைமுறைகளால் மாணவர் ஆராய்ச்சிக் கட்டுரை அளித்த 6 மாதங்களில் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும் என்றார்.

கல்வி உதவித் தொகை ரூ. 7 ஆயிரமாக உயர்வு: ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ரூ. 5 ஆயிரம், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ. 7 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்றும் துணைவேந்தர் க. திருவாசகம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.