முகப்பு
சென்னை

தியாகராய நகர் கடைகளுக்கு சீல்: சென்னை வீதிகளில் வேலை தேடும் ஊழியர்கள்!

சென்னை: தியாகராய நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெருக்களில் சீல் வைத்த கடைகளில் வேலை செய்த ஊழியர்கள் தற்போது சென்னையின் மற்ற பகுதிகளில் வேலை தேடத் தொடங்கி உள்ளனர். சென்னை தியாகராய நகரில் விதிகள் மீறி கட

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:09 PM
பகிர்:

சென்னை: தியாகராய நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெருக்களில் சீல் வைத்த கடைகளில் வேலை செய்த ஊழியர்கள் தற்போது சென்னையின் மற்ற பகுதிகளில் வேலை தேடத் தொடங்கி உள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் விதிகள் மீறி கட்டப்பட்டதாக சுமார் 25 கட்டங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி மாநகராட்சி நிர்வாகமும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் இணைந்து சீல் வைத்தன. இதனால் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் சீல் வைக்கப்பட்டிருந்த கடைகளில் வேலை செய்து வந்த சுமார் 5,000 இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கடைகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாததால், இவர்களது வாழ்கை கேள்விக் குறியாகியுள்ளது. இந்தக் கடைகளில் வேலை செய்து வந்த இளைஞர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

உச்சநீதிமன்றத்தில் தியாகராய நகர் வியாபார சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தியாகராய நகர் கடைகளில் புதிதாக சீல் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், சீல் வைக்கபட்ட கடைகளை நவம்பர் 30-ம் தேதி வரை இடிக்கத் தடையும் விதித்தது. சொந்த ஊர்களில் இருந்து இவற்றை கூர்ந்து கவனித்து வந்த சீல் வைத்த கடைகளின் ஊழியர்கள் வேறு வேலைகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்தக் கடைகளில் வேலை செய்தவர்கள் பெரும்பாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தீபாவளி போனஸ், சம்பளம், சேர்த்து வைத்த பணம் ஆகியவை சொந்த ஊரில் செலவானதை அடுத்து அவர்களில் சிலர் சென்னைக்கு வேலைத் தேடி மீண்டும் படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.சிலர் விவசாயக் கூலிகளாக தங்களது சொந்த ஊரிலேயே காலத்தை கடத்த முடிவும் செய்துள்ளனர். ஆனால், விவசாயம் பொய்த்த ஊரில் இருப்பவர்கள் மீண்டும் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர். தியாகராய நகருக்கு அடுத்தபடியாக புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட வணிக பகுதிகளில் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிக்கையோடு அவர்கள் சென்னைக்கு மீண்டும் வருகின்றனர்.

சீல் வைக்கப்பட்ட கடையின் ஊழியர் முத்துராஜா கூறியது: "நான் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான கடையின் ரெடிமேட் துணிகள் விற்பனை பிரிவில் வேலை செய்து வந்தேன். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி. கடைகள் சீல் வைக்கப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் கையில் இருக்கும் பணத்துடன் சொந்த ஊருக்கு சென்றேன். அடுத்த மாத வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியாததால் மீண்டும் வேலைத் தேடி சென்னைக்கு வந்து விட்டேன். முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடைகளில் வேலைத் தேட தொடங்கி உள்ளேன். என்னுடன் வேலை செய்த நண்பர்களும் தற்போது சென்னையில் வேலைத் தேடி முகாமிட்டுள்ளார்கள். வேலை நிச்சயம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா: "நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு மேற்கொண்ட இந்த சீல் வைக்கும் நடவடிக்கை காரணமாக 5,000 பேர் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியை சேர்ந்த 400 வணிகர் சங்கங்கள் தமிழக முதல்வரின் தனிச் செயலரை சந்தித்து மனு கொடுத்து வருகிறோம். சீல் வைக்கப்பட்ட கடைகளை உடனடியாக திறப்பதற்கான வழி வகையை தமிழக அரசு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டியதற்கு அபராத தொகையை கட்ட வணிகர்கள் தயாராக உள்ளனர். சென்னைக்கு திரும்பும் சீல் வைக்கப்பட்ட கடைகளின் அனைத்து ஊழியர்களுக்கும் மற்றப் பகுதிகளில் வேலை கிடைப்பது கடினம். இவர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை கிடைக்க வேண்டும் என்றால் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்தால் மட்டுமே முடியும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments