முகப்பு
சென்னை

ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்பத் தடை

சென்னை, அக்.6: ஒரு நாளைக்கு ஒரு சிம் கார்டில் இருந்து 100 எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்ப அனுமதியுண்டு என்ற புதிய கட்டுப்பாட்டின் காரணமாகக் கூடுதல் சிம்கார்டுகளை வாங்கப் பொது மக்கள் ஆர்வம் காட்டத் தொடங

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:43 PM
பகிர்:

சென்னை, அக்.6: ஒரு நாளைக்கு ஒரு சிம் கார்டில் இருந்து 100 எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்ப அனுமதியுண்டு என்ற புதிய கட்டுப்பாட்டின் காரணமாகக் கூடுதல் சிம்கார்டுகளை வாங்கப் பொது மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம், ஒரு நாளைக்கு ஒரு சிம்கார்டில் இருந்து 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்ப முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. ஆனால் இந்தப் புதிய விதி குறித்து அறியாத பல நிறுவனங்களும், இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் செல்போன்களில் இருந்து 100 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்பிவிட்டு எதிர் தரப்பில் இருந்து பதில் வருகிறதா என்று காத்துக்கிடந்தனர்.

முன்பு எண்ணற்ற எஸ்.எம்.எஸ்.கள் அனுப்ப ஒரு மாதத்துக்கு ரூ.26 முதல் ரூ.60 வரை கட்டணம் வசூலித்து வந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ். கட்டுப்பாட்டு நடவடிக்கையால் செய்வதறியாமல் தவித்து வந்தன.

Advertisement

இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்புவர்கள், தற்போது கூடுதலாக இரண்டு, மூன்று சிம்கார்டுகளை வாங்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால், எங்கே வாடிக்கையாளர்கள் தங்களை விட்டுச் சென்று விடுவார்களோ என அச்சத்தில் இருந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளன.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் இந்தப் புதிய விதியினால் செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2 மற்றும் 3 சிம்கார்டுகள் போடும் வசதியுள்ள செல்போன்கள் தற்போது சந்தையில் கிடைப்பதால் அவற்றின் தேவையும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இது குறித்து தனியார் வங்கியின் விற்பனைப் பிரிவு மேலாளர் ரா.கிருஷ்ணன் கூறியது: எனது தலைமையின் கீழ் 80 பேர் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறார்கள்.

காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை அவர்களின் வேலையை எஸ்.எம்.எஸ். மூலம் கண்காணித்து தெரிந்து கொள்வேன். அவர்களுக்கு எனது கட்டளைகளையும் எஸ்.எம்.எஸ். மூலமே தெரியப்படுத்துவேன். தற்போது, இந்தப் புதிய கட்டுப்பாட்டின் காரணமாக நான் 4 செல்போன்களைப் பயன்படுத்தி வருகிறேன்.

இது எனக்கு கூடுதல் செலவையும் ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

ராயப்பேட்டையில் உள்ள செல்போன் விற்பனை நிலையத்தின் ஊழியர் செல்வகுமார் கூறியது: தற்போது 2 முதல் 4 சிம்கார்கார்டுகள் போடும் வசதி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்துவிட்டதால், இது போன்ற மாடல்கள் கொண்ட செல்போன்கள் வாங்கும் ஆர்வம் பொது மக்களிடையே அதிகரிக்கும்.இந்த எஸ்.எம்.எஸ். கட்டுப்பாட்டின் காரணமாக தற்போது செல்போன் விற்பனையில் பெரிய அளவிலான மாற்றம் உடனடியாக ஏற்படவில்லை என்றாலும் இனி வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார் அவர்.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் இந்தப் புதிய கட்டுப்பாடு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மறைமுகமாக வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுவதாக உள்ளது என்றார் சிம்கார்டு விற்பனையாளர் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments