வேலைவாய்ப்புப் பதிவுக்கான இணையதளம் முடங்கியது
சென்னை, செப். 7: வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் ஸ்தம்பித்ததால், ஏராளமான பி.எட். பட்டதாரிகள் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற முதல் நாளிலேயே பதிவு செய்ய முடியாமல் போயுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்கள் அ
சென்னை, செப். 7: வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் ஸ்தம்பித்ததால், ஏராளமான பி.எட். பட்டதாரிகள் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற முதல் நாளிலேயே பதிவு செய்ய முடியாமல் போயுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்கள் அடுத்தடுத்த நாள்களில் பி.எட். பட்டத்தை பதிவு செய்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான பதிவு மூப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே எழுந்துள்ளது.
தமிழக முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் 2010-11 கல்வியாண்டில் பி.எட். படிப்பு மேற்கொண்டு தேர்ச்சி பெற்ற 1 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 3) மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதாவது சென்னையில் உள்ள தமிழ்நாடு பி.எட். பல்கலைக்கழகத்திடமிருந்து மதிப்பெண் சான்றிதழ்கள் பெறப்பட்டு, அந்தந்த கல்லூரிகள் சார்பில் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
Advertisement
அந்தந்தக் கல்லூரிகளிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்புகளுக்கு பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது. அதேநேரம், சனிக்கிழமை சென்னை சாந்தோமிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் விடுமுறை என்பதால், அனைத்து மாணவர்களும் இணைய தளம் மூலம் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது. ஒரு லட்சம் மாணவர்களும் மதிப்பெண் சான்றிதழ் பெற்றதால் ஏராளமான மாணவர்கள் தங்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்வதற்காக www.tnvelaivaaippu.gov.in/empower என்ற இணையதளத்தை ஒரே நேரத்தில் முயற்சித்ததால், இணையதள பதிவு ஸ்தம்பித்தது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே, சனிக்கிழமை வெற்றிகரமாக பதிவு செய்தனர்.
அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இன்டர்நெட் மையங்கள் விடுமுறை என்பதால், நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே அன்று இணையதளம் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பை பெற்றனர். பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் இதில் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அடுத்த வேலை நாளான, திங்கள்கிழமை பதிவு செய்துள்ளனர். இதனால் இவர்களுக்கு பதிவு மூப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையை அடுத்த வாலாஜாபாதைச் சேர்ந்த பி.எட். பட்டதாரி ரமேஷ்குமார் கூறியது: தமிழகத்தில் கடந்த 2010-11 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கு ஒரு வார கால அவகாசத்தை தமிழக அரசு வழங்கியது. அந்த ஒரு வார காலத்தில் பதிவு செய்யும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான பதிவு மூப்பு வழங்கப்பட்டது.
இதுபோல் பி.எட். பட்டதாரிகளையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். சனிக்கிழமை மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தபோதும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் பல மாணவர்கள் உடனடியாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அடுத்த வேலை நாளான திங்கள்கிழமை (செப்டம்பர் 5) வரை பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும், ஒரே மாதிரியான பதிவு மூப்பு வழங்க தமிழக அரசு கருணை காட்டவேண்டும் என்றார்.
இதுகுறித்து சென்னை தொழில் படிப்பு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி கூறியது: விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு செய்த பி.எட். பட்டதாரிகளுக்கு ஒரே மாதிரியான பதிவு மூப்பு வழங்கப்படும்.
ஆனால், திங்கள்கிழமை பதிவு செய்தவர்களுக்கும் ஒரே மாதிரியான பதிவு மூப்பு அளிக்க, தமிழக அரசுதான் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.