முகப்பு
சென்னை

சென்னை அண்ணா பல்கலை. பாடத் திட்டத்தைப் பின்பற்ற உத்தரவு

சென்னை, செப். 9: அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து, முன்பிருந்ததுபோல் ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை கூட்டத்தொடர் முடிவடைவதற்குள், இந்தப்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:49 AM
பகிர்:

சென்னை, செப். 9: அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து, முன்பிருந்ததுபோல் ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை கூட்டத்தொடர் முடிவடைவதற்குள், இந்தப் பணிகள் முழுவதையும் முடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் "2009 பாடத்திட்டம் மற்றும் சுற்றறிக்கைகளை‘ பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இதற்கான உத்தரவு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் இருந்து, அனைத்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என 5 பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டன.

இந்த நிலையில் அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன், பிரிக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என அறிவித்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது.

இதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கும், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அனைத்து பி.இ., பி.டெக். மாணவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. புதன்கிழமை (செப்டம்பர் 7) எஞ்சியுள்ள பி.ஆர்க்., எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட முதுநிலை பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் முதல் பருவத்திலிருந்தே இந்தப் பாடத்திட்டம் அமலாகிறது.

அனைத்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, ஒரே சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக ஆக்கும் பணிகள், சட்டப் பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் அதாவது வரும் 14-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.