முகப்பு
சென்னை

சுகாதார சீர்கேட்டில் சிங்காரவேலர் மாளிகை: ஆட்சியர் அலுவலகத்தின் அவல நிலை

சென்னை, செப். 18: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சிங்காரவேலர் மாளிகை, குப்பைக்கூளங்கள் நிறைந்து சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் உள்ள மிகப் பழமைவாய்ந்த நகரங்களில்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:59 AM
பகிர்:

சென்னை, செப். 18: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சிங்காரவேலர் மாளிகை, குப்பைக்கூளங்கள் நிறைந்து சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் உள்ள மிகப் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான சென்னையின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இந்த அவல நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட துணை ஆட்சியர்களின் அலுவலகங்கள், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களை உள்ளடக்கி, 8 அடுக்கு மாடியாக உயர்ந்து நிற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 11.12.1996-ல் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

இந்த அலுவலகக் கட்டடத்துக்கு, மீனவர் சமுதாயத்திலிருந்து முதல் வழக்குரைஞராக உருவெடுத்த எம்.சிங்காரவேலரின் பெயர் சூட்டப்பட்டு, -சிங்காரவேலர் மாளிகை- என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டடம் அமைக்கப்படுவதற்கு முன்பு, அந்த இடத்தில் மதராஸ் மாகாண கவர்னர் பென்டிங்க் பெயரில் அமைந்திருந்த பழைய கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மட்டும் அல்லாமல் மதராஸ் மாகாண உச்ச நீதிமன்ற வளாகமாகவும் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பழமையும், பெருமையும் வாய்ந்த ஆட்சியர் அலுவலக வளாகம் போதிய பராமரிப்பு இன்றி, திரும்பிய பக்கமெல்லாம் குப்பைக் கூளங்கள் நிறைந்து காணப்படுகின்றது. தரைத் தளத்துக்கு கீழே உள்ள பாதாள அறை குப்பை கிடங்காகவே மாற்றப்பட்டுள்ளது. உடைந்த மரச் சாமான்கள் போடப்பட்டிருப்பதோடு , படிகள் முழுவதும் எச்சில்கள், உணவு மிச்சங்கள், காகிதக் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன. கட்டடத்தின் 4-வது மாடிப் படி அமைந்துள்ள இடம், அலுவலர்கள் சிகரெட் பிடிக்கும் இடமாக மாறியுள்ளது. அந்தப் படிகள் முழுவதிலும் சிகரெட் மிச்சங்களும், பெட்டிகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. இதுபோல் 5, 6, 7 மற்றும் 8-வது மாடிகளின் படிகளும் குப்பைக் கூளங்களுடனும், சுவர்கள் முழுவதும் பாக்கு எச்சில்களாகவும் காட்சியளிக்கின்றன.

மேலும் அனைத்துத் தளங்களிலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் சுத்திகரித்த குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அனைத்தும் பழுதடைந்து, செயல்படாமல் உள்ளன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வந்து செல்வதோடு மட்டும் அல்லாமல், கடந்த சனிக்கிழமை மாநில அமைச்சர்கள் இருவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தபோதும்கூட வளாகம் சுத்தம் செய்யப்படாதது, பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி வளாகத்தின் 8-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, கூட்டரங்கு கழிவறைக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் அனைத்தும் கூட்ட அரங்குக்குள் வழிந்தோடி வந்தது. மேலும், கூட்டரங்கு வயர் இணைப்பில் தீப்பொறி ஏற்பட்டது, அங்கிருந்தவர்களை பீதியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலக சுகாதார ஊழியர் ஒருவர் கூறியது: பல மாதங்களாக இதே நிலையில்தான் ஆட்சியர் அலுவலக வளாகம் காட்சியளிக்கிறது. ஆனால், அதிகாரிகள் யாரும் இதைக் கண்டுகொள்வது இல்லை. கழிவறைக் குழாய்களில் பல நாள்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை நீர் வடிந்தோடுவதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதுகுறித்து பொதுப் பணித் துறையிடம் புகார் அளித்தும், கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றனர் என்றார்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் ஓரளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மாநிலத்தின் தலைநகரான சென்னையின் ஆட்சியர் அலுவலக வளாகம் சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிப்பது கவலை அளிக்கின்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.