சென்னை, ஆக. 4: தமிழக காவல்துறையில் மகளிர் போலீஸாருக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் புறகணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழக காவல் துறையில் மகளிர் சேர்க்கப்பட்டனர். 1991-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
இதன் பின்னர் படிப்படியாக மகளிர் போலீஸார், காவல்துறையின் அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பதவி உயர்வில் மகளிர் போலீஸார் புறக்கணிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 1986- ல் தமிழக காவல்துறையால் 45 முதல்நிலை பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளில் கொடுக்கப்பட வேண்டிய தலைமைக் காவலர் பதவி உயர்வு சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் 2002-ல் வழங்கப்பட்டது. இதனால் மகளிர் போலீஸார் பல்வேறு மன நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தனர். இதன் பின்னரும் மகளிர் போலீஸார் பாரபட்சத்தோடே நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பதவி உயர்வில் பாரபட்சம்: இந் நிலையில் பணிக்கு சேர்ந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. இது குறித்து மகளிர் போலீஸார், காவல்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை என்று பாதிக்கப்பட்ட மகளிர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில் தொடர் வலியுறுத்தலின் காரணமாக 2009-ல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இப் பதவி உயர்வு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில், சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்கள் இல்லாததால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், காலி பணியிடங்கள் ஏற்பட்டதும் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவாதத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் காப்பாற்றவில்லை.
பதவி உயர்வுக்குப் பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் பலமுறை ஏற்பட்டும் மகளிர் போலீஸாருக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு வழங்கப்படாமலேயே இருப்பதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல சலுகைகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இவர்கள் பணிக்கு சேர்ந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்குரிய தகுதிப் பெற்றுள்ளனர். ஆனால் இன்னும் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கூட பெறாமல் இருப்பதினால், அவர்களிடம் மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குப் பின்னர் பணியில் சேர்ந்த முதல்நிலை ஆண் காவலர்கள், டி.எஸ்.பி. வரையில் பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், இவர்கள் இன்னும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக வேலை செய்வது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மகளிர் போலீஸார் பதவி உயர்வில் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து அதிகாரிகளும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழக காவல்துறைக்கும், மகளிருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வரும் நிலையில், தங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வை கிடைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.