முகப்பு
சென்னை

அண்ணா நகர் ரயில் நிலையம் எப்போது செயல்படும்?

சென்னை, பிப்.24: சென்னை அண்ணா நகரில் உள்ள ரயில் நிலையம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாததால் பாழடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.  சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்) உள்ளது. இங்கு

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

சென்னை, பிப்.24: சென்னை அண்ணா நகரில் உள்ள ரயில் நிலையம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாததால் பாழடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

 சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்) உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பெட்டிகளை வெளியே அனுப்புவதற்காக வில்லிவாக்கம் - ஐ.சி.எப். இடையேயான 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு வருகிறது.

 இந்தத் தண்டவாளத்தை ரூ. 7.29 கோடி செலவில் பலப்படுத்தி அந்த மார்க்கத்தில் பயணிகள் ரயில் சேவையையும் தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அந்த இடைப்பட்ட இடத்தில் பாடி, அண்ணா நகர் ஆகிய 2 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு வரை ரயில் பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

 கடந்த 2003-ம் ஆண்டு அப்போது மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்த ஏ.கே.மூர்த்தி அந்த மார்க்கத்தில் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

 அண்ணா நகர் ரயில் நிலையத்தால் திருமங்கலம் சாலை, லட்சுமி புரம், ஐகோர்ட்டு காலனி, நாவலர் நகர், தென்றல் காலனி, முல்லை நகர், கம்பர் குடியிருப்பு, அகத்தியர் நகர், குமாரசாமி நகர், பொன்விழா நகர், லெட்சுமி தெரு உள்பட அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பயன் அடைந்தனர்.

 இந்நிலையில் பாடி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. அதை காரணம் காட்டி அண்ணா நகருக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேம்பாலப்பணிகள் முடிந்த பிறகு அண்ணா நகருக்கு ரயில் விடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

 ஆனால் பாடி மேம்பாலத்தின் பணிகள் 2008, ஏப்ரல் 9-ல் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 2008, அக்டோபர் 26-ல் திறக்கப்பட்டது.

 எனினும் இதுவரை அண்ணா நகர் ரயில் நிலையத்தின் சேவை தொடங்கப்படவில்லை. தற்போது ஐ.சி.எப்-ல் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் மட்டுமே அந்த வழியில் செல்கின்றன.

 பராமரிப்பின்றி காட்சி தரும் ரயில் நிலையம்: 4 ஆண்டுகளாக ரயில் வராததால் அண்ணா நகர் ரயில் நிலையம் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. ரயில் நிலையத்தில் உள்ள கோப்புகள் அனைத்தும் பாழான நிலையில் உள்ளன.

 இந்த ரயில் நிலையத்தின் நடைமேடைகள் காலையும், மாலையும் ஏராளமானோர் நடைபயிற்சி செய்வதற்காக உபயோகப்படுகிறது.

 ரயில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் புதரால் சூழப்பட்டுள்ளன. இதன் காரணமாக அண்ணா நகர் ரயில் நிலையம் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

 இதன் காரணமாக அண்ணா நகர் ரயில் நிலையம் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோயம்பேடு வரை ரயில் பாதையை விரிவுபடுத்தினால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments