உதவி மின் பொறியாளர் காலியிடங்களை நேரடியாக நிரப்ப முயற்சி
சென்னை, ஜன. 1: உதவி மின் பொறியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப மின் வாரியம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் 600 பேரின் நிலை கேள்
சென்னை, ஜன. 1: உதவி மின் பொறியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப மின் வாரியம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் 600 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவு உள்ளபோதும், அதை மீறி நேரடி நியமனத்துக்கு மின் வாரியம் முயற்சிப்பதாக பொறியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர் (ஏ.இ.) பணி, இளநிலைப் பொறியாளர் கிரேடு-1 பதவிக்கு இணையானது. அதாவது உதவிப் பொறியாளர் என்பவர் நேரடியாக நியமனம் செய்யப்படுபவர். இளநிலைப் பொறியாளர் பணியிடம் என்பது, மின் வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியில் சேர்பவர்கள், பதவி உயர்வு மூலம் இளநிலை பொறியாளர் கிரேடு-2 நிலையை எட்டி, அடுத்த பதவி உயர்வு மூலம் இளநிலை பொறியாளர் கிரேடு-1 நிலையை அடைவார்.
Advertisement
தமிழ்நாடு மின் வாரிய விதிகளின்படி, உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் கிரேடு-1 பணியிடங்கள் இரண்டும் 2:3 என்ற விகிதத்தில்தான் நியமிக்கப்பட வேண்டும்.
அதாவது, 2 உதவிப் பொறியாளர்களை நியமித்தால், 3 இளநிலைப் பொறியாளர் கிரேடு-2 பணியாளர்களுக்கு இளநிலைப் பொறியாளர் கிரேடு-1 பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும்.
மின் வாரியத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி, உதவிப் பொறியாளர் பணியிடங்கள் 2,413. இளநிலைப் பொறியாளர் கிரேடு-1 பணியிடங்கள் 2,959.
ஆனால், இப்போது உதவிப் பொறியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 438 பேர் கூடுதலாக உள்ளனர். அதாவது 2,851 உதவிப் பொறியாளர்கள் உள்ளனர். அதே நேரம், இளநிலைப் பொறியாளர் கிரேடு-1 பணியாளர்கள் 2,045 பேர் மட்டுமே உள்ளனர்.
இளநிலைப் பொறியாளர் கிரேடு-2 பணியாளர்களில், பதவி உயர்வுக்குத் தகுதியாக 600 பேர் உள்ளபோதும், பல ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்க மின் வாரியம் மறுத்து வருகிறது. இவர்கள் அனைவரும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக கிரேடு-2 நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2008-ல் நேரடி நியமனம் மூலம் 300 உதவிப் பொறியாளர்களை நியமிக்க, மின் வாரியம் முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து இளநிலைப் பொறியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உதவிப் பொறியாளர் நேரடி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் விதிகளின்படி, 2:3 என்ற விகிதத்தைப் பின்பற்றி பணி நியமனம் செய்யுமாறும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், இளநிலை உதவிப் பொறியாளர் கிரேடு-2 பணியாளர்களில் தகுதியானவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு அளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு உள்ள பிற குறைகளும் நீக்கப்படும் என்றும் வாரியம் உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து, 300 உதவிப் பொறியாளர் நேரடி நியமனத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதன் மூலம், 300 பேரை உதவிப் பொறியாளர் பணியிடத்தில் நேரடியாக மின் வாரியம் நியமித்துக்கொண்டது. ஆனால், இளநிலை பொறியாளர் கிரேடு-2 பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இப்போது, 600 உதவிப் பொறியாளர்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்க மின் வாரியம் முயற்சி எடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள இளநிலைப் பொறியாளர்கள் கூறியது: மின் வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர்களாகச் சேர்ந்து இளநிலைப் பொறியாளர்களாக இப்போது பணியாற்றி வருபவர்களில் பெரும்பாலானோர், பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்தவர்கள். இதுபோன்று டிப்ளமோ முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க மறுத்து வருகின்றனர் என்றனர்.