முகப்பு
சென்னை

தியாகராய நகரில் கடைகளைத் திறக்க அனுமதி: வணிகர்கள் வரவேற்பு

சென்னை, ஜன. 9: சென்னை தியாகராய நகர்ப் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளைத் தாற்காலிகமாக 6 வாரங்களுக்குத் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:47 PM
பகிர்:

சென்னை, ஜன. 9: சென்னை தியாகராய நகர்ப் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளைத் தாற்காலிகமாக 6 வாரங்களுக்குத் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வணிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 தியாகராய நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக 25 கட்டடங்களுக்கு 2011 அக்டோபர் 30-ம் தேதி சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சியும் இணைந்து சீல் வைத்தன.

 இதனால், இக்கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன், அங்கு பணிபுரிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.

Advertisement

 இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியாகராய நகர் வியாபாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட கடைகளை 6 வாரங்களுக்கு திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து கடைகளின் சீல்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் எப்போது வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வணிகர்கள் காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் இரண்டு மாதங்களாகத் தொய்வில் இருந்த வியாபாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை வணிகர்கள் தொடங்கிவிட்டனர்.

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: "பொங்கல் திருநாளை முன்னிட்டு தியாகராய நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பு நிரந்தரமானதாக இருந்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

 வணிகர்களின் நலனை காக்க, இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும். விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என்றார் விக்கிரமராஜா.

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்: "சென்னையின் பிரதான வியாபாரப் பகுதியான தியாகராய நகரில் கடைகளுக்கு சீல் வைத்ததால், வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

 கட்டடங்கள் கட்டப்படுவதற்கு முன்பாகவே விதிமீறல்கள் இருக்கிறதா என்று அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். அவர்களின் அலட்சியத்தால் வணிகர்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார் வெள்ளையன்.

 ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ரத்தினம்: "சி.எம்.டி.ஏ. மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டடங்களுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற வேண்டும்.

 இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கடைகள் பூட்டிக் கிடந்ததால், அதனுள் இருந்த பொருள்கள் தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. மூடப்பட்ட கடைகளின் அருகே சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. ரங்நாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள பல கடைகளில் எலி மற்றும் பூனைகளின் தொல்லை உள்ளது. அவற்றால் கடைகளில் வைத்துள்ளப் பொருள்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

 ÷மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். இதன் காரணமாக, தற்போது கடைகள் திறக்கப்பட்டாலும் வேலை செய்வதற்கு ஆள்கள் இல்லை என்றார் ரத்தினம்.

 சீல் எப்போது அகற்றப்படும் ?

 யாகராய நகரில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களை 6 வாரங்களுக்குத் திறக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்ததையடுத்து, மூடப்பட்ட கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற ஆவல் வணிகர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் டேவிதார் கூறுகையில், "இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பின் நகல் கிடைத்த பின், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கடைகளின் சீலை அகற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.

 பணியாளர்கள் பற்றாக்குறை: தியாகராய நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். சிலர் சென்னையில் உள்ள மற்ற பெரிய கடைகளில் தாற்காலிக வேலையைத் தேடிக்கொண்டனர். இதனால், தற்போது கடைகள் திறக்கப்பட்டாலும், அங்கு பணிபுரிய பணியாளர்கள் இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments