சென்னை, ஜூன் 10: சென்னையில் பெருகி வரும் குற்றங்களைக் குறைப்பதற்காக "சமுதாயத் தொடர்புக் குழு' என்ற புதிய அமைப்பைத் தொடங்க காவல்துறை திட்டமிட்டிருக்கிறது.
காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக இந்த புது வியூகத்தை கையாள காவல்துறை முற்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில் அண்மைக்காலமாக வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
குற்றங்களைக் குறைக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகின்றது. இதை உணர்ந்திருக்கும் காவல்துறை, குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான பிற வழிகள் குறித்து இப்போது ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
இடைவெளியைக் குறைக்க... இதன் ஒரு பகுதியாக மக்களுக்கும், காவல்துறைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காணும் வகையிலும் "சமுதாயத் தொடர்புக் குழு' என்ற அமைப்பைத் தொடங்க பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணியை காவல்துறை உயர் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த சமுதாயத் தொடர்புக் குழுவில் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஈடுபடுத்துவது என பெருநகர காவல் ஆணையர் ஜே.கே. திரிபாதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் டாக்டர்கள், என்ஜினீயர்கள், டிரைவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், கடைக்காரர்கள், மாணவர்கள் ஆகியோரில் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்களை இனங்கண்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள பீட் ஆபீசர்கள், தங்களது பகுதியில் உள்ள சமூகநல ஆர்வலர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சமுதாயத் தொடர்புக் குழுவில் இணைவதற்கு ஆர்வம் உள்ளதா என விருப்பம் கேட்டு வருகின்றனர். அடையாளம் காணும் பணி முடிந்த பின்னர், ஒரு மாதத்துக்குள் சமுதாயத் தொடர்புக் குழு செயல்படத் தொடங்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீட் ஆபீசர் திட்டத்தின் கீழ்: இந்த சமுதாயத் தொடர்புக் குழுவும் பீட் ஆபீசர்கள் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
பீட் ஆபீசர் திட்டத்தின் கீழ் போலீஸாருடன் இணைந்து ஊர் காவல்படையினரும், போலீஸ் நண்பர்கள் குழுவினரும் நகரம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 403 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டிருப்பதோடு, மாதத்துக்கு 25 லிட்டர் பெட்ரோலும் வழங்கப்படுகிறது. இப்போது செல்பேசிகளும் வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் தினமும் நடக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், குற்றச் சம்பவங்கள் காவல் நிலையங்களுக்கு வருவதற்கு முன்பே பீட் ஆபீசர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அப் பிரச்னைகளுக்கு வேகமாக தீர்வு காணப்படுவதாகவும், குற்றங்கள் ஓரளவு குறைந்திருப்பதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பீட் ஆபீசர் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவே இப்போது சமுதாயத் தொடர்புக் குழு உருவாக்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் இத் திட்டத்தில் இடம்பெறுவதால் குற்றங்களும், சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளும் கட்டுப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.