முகப்பு
சென்னை

சட்டப் பேரவை வளாகத்தில் விரைவில் 15 பொதுத் தொலைபேசிகள்

சென்னை, மார்ச் 1: கர்நாடக சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் 15 பொதுத் தொலைபேசிகள் வைக்கப்படவுள்ளன. சட்டப் பேரவை

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:33 PM
பகிர்:

சென்னை, மார்ச் 1: கர்நாடக சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் 15 பொதுத் தொலைபேசிகள் வைக்கப்படவுள்ளன.

சட்டப் பேரவை மண்டபத்தைச் சுற்றி, அதாவது தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து பேரவைக்குச் செல்லும் வழிகளில் அவை வைக்கப்பட உள்ளன.

நாணயங்களைச் செலுத்தி பேசும் வசதியுடன், ப்ரீபெய்டு கார்டு மூலம் பேசும் புதிய முறையையும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அங்கு அறிமுகப்படுத்த உள்ளது.

சிறப்பு அம்சங்கள் என்ன? சட்டப் பேரவை வளாகத்தில் வைக்கப்படவுள்ள பொதுத் தொலைபேசிகளில் எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவுக்கு நாணயங்களைப் போடலாம். பேசி முடித்தததும், மீதத் தொகை வெளியே வந்துவிடும். உதாரணமாக, 5 ரூபாய் நாணயம் போட்டால், அந்தத் தொகை தீரும் வரை பேசலாம். 3 ரூபாய் வரை மட்டுமே பேசினால் மீதி 2 ரூபாய் வெளியே வந்துவிடும்.

செல்போனில் உள்ளது போல, ப்ரீபெய்டு அட்டையைப் பயன்படுத்தியும் பேச வசதி செய்யப்படுகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் முதல் முறையாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், நாணயங்களைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. அட்டையைத் தேய்த்து விட்டு அந்தத் தொகை உள்ளவரை பேசலாம்.

தொலைபேசிகளின் செயல்பாடுகள் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகத்தில் இருந்தே கண்காணிக்கப்படும். அவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் இணைப்பகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் கிடைத்து விடும். இதன் மூலம் பழுது உடனடியாக நீக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனால், மூன்று அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழந்தனர்.

அதுபோன்ற சம்பவங்கள் தமிழக சட்டப் பேரவையில் நிகழாமல் இருக்க, அவைக் குழு அண்மையில் கூடி விவாதித்தது.

பேரவைக்குள் செல்போன்களைக் கொண்டு வர தடை விதிக்க அதில் யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த யோசனையைச் செயல்படுத்தும் நடவடிக்கையில் சட்டப் பேரவைச் செயலகம் இறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.