முகப்பு
சென்னை

மின் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் குறையுமா?

சென்னை, மார்ச் 24: தங்களுக்கு வழங்கப்படும் மின்சார அளவுக்கு ஏற்ப கட்டணத்தைக் குறைத்துக் கொண்டால் கணிசமான செலவு குறையும் என்று தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர். மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ம

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

சென்னை, மார்ச் 24: தங்களுக்கு வழங்கப்படும் மின்சார அளவுக்கு ஏற்ப கட்டணத்தைக் குறைத்துக் கொண்டால் கணிசமான செலவு குறையும் என்று தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, மின் உபயோகத்தைக் குறைப்பது, மின் விடுமுறை நாள் உள்ளிட்ட நடைமுறைகளை மின்வாரியம் அமல் படுத்தி வருகிறது. ஆனால் இதனால் குறையும் மின் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணத்தைக் குறைப்பதில்லை என்று தொழில் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

1000 கே.வி.ஏ. அளவு மின்சாரம் பயன்படுத்தும் தொழில் நிறுவனத்துக்கு மாதம் ரூ.300 என்ற அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதுதவிர, பயன்படுத்தும் யூனிட்டுகளுக்குத் தனிக் கட்டணம் உண்டு. இந்த 1,000 கே.வி.ஏ. என்பது, மாதம் முழுக்க, தினமும் 24 மணி நேரமும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் ஆகும்.

ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவில் 60 சதவீதம் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இப்போது மின்வாரியம் கூறியுள்ளது. இது தவிர, வாரத்தில் ஒரு நாள் மின் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை என 8 நாள்கள் குறைந்துவிடுகின்றன.

ஒரு தொழில் நிறுவனத்துக்குப் புதிதாக மின் இணைப்பு வாங்கும்போது 25-ம் தேதியில் இணைப்பு வாங்கினால் 2 நாளுக்கு மட்டும் கணக்கிட்டு அந்த மாத மின் கட்டணம் வசூலிக்கப்படும். 27-ம் தேதியுடன் மின் உபயோகம் கணக்கு எடுக்கப்படுவதால் 2 நாளுக்குக் கணக்கிடுகிறார்கள்.

அதேபோல இப்போது எட்டு நாள்களுக்கான கட்டண அளவைக் குறைக்க மின்வாரியம் முன்வர வேண்டும் என்று தொழில் நிறுவனத்தினர் கோருகின்றனர்.

இதுமட்டுமின்றி தினசரி ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதையும் கணக்கிட்டு, பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டால், அனுமதி பெற்றதில் 35 சதவீத அளவு மட்டுமே பயன்படுத்த முடிகிறது என்கிறார்கள். இது சென்னைப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிலை.

சென்னை தவிர்த்த, மாநிலத்தின் பிற பகுதிகளில் 31 சதவீத அளவுக்குதான் பயன்படுத்த முடிகிறது என்கிறார்கள்.

இந்த இழப்புகளையும் கணக்கிட்டால், 1000 கே.வி.ஏ. அளவுக்கு அனுமதி பெற்ற ஒரு தொழில் நிறுவனத்துக்கு, சென்னை பகுதியில் ரூ. 75 ஆயிரமும், பிற பகுதிகளில் ரூ. 87 ஆயிரமும் மிச்சமாகும் என்று கூறுகின்றனர்.

"பவர் பேக்டர்' குறைவாக இருந்தால் ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை முன்பு இருந்தது. அதனால் தொழில் நிறுவனங்களுக்கு சிறிது லாபம் கிடைத்தது. இப்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைத்தால், தங்களுக்கு மிச்சமாகும் பணத்தில், ஜெனரேட்டர்களுக்கு டீசல் வாங்குவதற்கான செலவை ஓரளவுக்குச் சமாளிக்க உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் மின்சாரத்துக்கும் வரி செலுத்த வேண்டியுள்ளது. மின் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த வரியைத் தாற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர் தொழில் துறையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.