சென்னை

போலீஸாருக்கே அடையாள அட்டை இல்லை!

சென்னை: போலீஸாருக்கு அவர்கள் துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டைகள் நீண்டகாலமாக வழங்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால், தனியார் கடைகளில் விற்கப்படும் அடையாள அட்டைகளை போலீஸார் பயன்படுத்தி

கே.வாசுதேவன்

சென்னை: போலீஸாருக்கு அவர்கள் துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டைகள் நீண்டகாலமாக வழங்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.

இதனால், தனியார் கடைகளில் விற்கப்படும் அடையாள அட்டைகளை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுஇடங்களில் சந்தேகத்தின்பேரில் போலீஸார் ஒருவரை விசாரிக்கும்போது முதலில் கேட்பது அந்த நபரின் அடையாள அட்டையைத்தான். அந்த அடையாள அட்டை ஒரிஜினலா, போலியா என்பதைக் கண்டறிந்த பின்னரே அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிப்பதா அல்லது வீட்டுக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்கிறார்கள். ஆனால், போலீஸாருக்கே அடையாள அட்டை இல்லை என்றால் என்னவென்று சொல்வது?

போலீஸார் பயிற்சியில் சேரும்போது அவர்களுக்கு துறைரீதியாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பின்னர் அவர்கள் ஆயுதப்படையில் பணிபுரியும்போதும் அதிகாரப்பூர்வமாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் ஆயுதப்படையில் இருந்து சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து காவல் பணிகளுக்குச் செல்லும்போது அடையாள அட்டைகள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் எழும்பூர் போன்ற பகுதிகளில் போலீஸ் சீருடை விற்கப்படும் குறிப்பிட்ட கடைகளில் அடையாள அட்டைகளையும் போலீஸார் வாங்குவதாகக் கூறப்படுகிறது. அதில் தங்களின் புகைப்படத்தை ஒட்டி உயர் அதிகாரிகளின் கையொப்பம், முத்திரைப் பெற்று அடையாள அட்டையாக போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.

பதவி உயர்வு பெறும்போதும், பணியிடம் மாறும்போதும் போலீஸாருக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸாருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அடையாள அட்டை வழங்குவதற்குரிய வரிசை எண், யூனிட் பொறுப்பாளர்களின் ஒப்புதல் ஆகியவை கிடைப்பதில்லை என போலீஸார் கூறுகின்றனர்.

இதன் காரணமாக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்குச் செல்லும்போதும், வெளியூர்களுக்கு பாதுகாப்புப் பணிக்குச் செல்லும்போதும் போலீஸாருக்கு பெரும் பிரச்னை ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் பயிற்சிப் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையும், ஆயுதப்படையில் வழங்கப்பட்ட அடையாள அட்டையும் மட்டுமே தங்களை போலீஸார் என்பதை நிரூபிப்பதற்கு உதவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

காவல்துறையின் முறையான அடையாள அட்டை இல்லாததால் பெரும்பாலான நேரங்களில் பொதுமக்கள் தங்களை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதாகவும் போலீஸார் ஆதங்கப்படுகின்றனர்.

அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலம் மட்டுமே ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் போலீஸாருக்கான அடையாள அட்டை சாதாரண கடைகளில் ரூ. 20- ல் இருந்து ரூ. 100 வரை விற்கப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக போலீஸாருக்கான அடையாள அட்டையை சமூக விரோதிகளும் வாங்கி பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதாக அவர் மேலும் கூறினார்.

போலி போலீஸார் பொதுமக்களை மிரட்டும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இப் பிரச்னையில் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். இதை கண்டுகொள்ளாமல்விட்டால், போலி போலீஸாரின் நடமாட்டம் அதிகரித்து விடும் என போலீஸ் வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

காவல்துறை உயர் அதிகாரிகள் இனியாவது விழிப்படைந்து முறையான அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்பதே போலீஸாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்...

மிழகத்தில் அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்கிறது. ஆனால் பாதுகாப்பு வளையத்துக்குள் சமூக விரோதிகள் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி ஊடுருவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இதனால் இப் பிரச்னையை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையாக மட்டும் கருத முடியாது. மும்பை, கொல்கத்தா, தில்லி போன்ற பெருநகரங்களில் போலீஸாருக்கு வழங்கப்படும் அதிநவீன அடையாள அட்டையை போன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும். இதன் மூலமாகவே போலி அடையாள அட்டை பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என போலீஸார் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT