சென்னை

ஓட்டுநர்கள் பற்றாக்குறை: திண்டாடும் தீயணைப்புத்துறை

தீயணைப்புத்துறையில் நிலவும் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கே.வாசுதேவன்

தீயணைப்புத்துறையில் நிலவும் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 308 தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 300-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் பணியிலுள்ள ஓட்டுநர்கள் கடும் வேலைப்பளுவுக்கு ஆளாவதோடு, தீயணைப்பு மற்றும் மீட்பு உள்ளிட்ட அவசரகாலப் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றமுடியாத அவலநிலை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

சேவைகளின் தேவையைப் பொருத்து தமிழகத்திலுள்ள தீயணைப்பு நிலையங்கள் அனைத்தும் சிங்கிள் யூனிட், டபுள் யூனிட், டிரிபிள் யூனிட் என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. சிங்கிள் யூனிட் தீயணைப்பு நிலையங்களில் 2 வாகன ஓட்டுநர்கள், 14 தீயணைப்பு வீரர்கள், 2 முன்னணி தீயணைப்பு வீரர்கள், ஒரு மெக்கானிக், ஒரு நிலைய அலுவலர் என நியமிக்கப்பட்டுள்ளனர். டபுள் யூனிட்டில் இந்தக் கட்டமைப்பு இரண்டு மடங்கு எண்ணிக்கையிலும், டிரிபிள் யூனிட்டில் மூன்று மடங்காகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வகை யூனிட்களுக்கும் தலைமை அதிகாரியாக ஒரு நிலைய அலுவலர் மட்டுமே இருப்பார். அதேவேளையில் அந்தந்த யூனிட்டை பொருத்து தீயணைப்பு வாகனங்களும், கருவிகள் மற்றும் தளவாடங்களும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும்.

பொதுவாக, தீ விபத்து அல்லது அசம்பாவிதங்கள் குறித்து தகவல் கிடைத்த 21 வினாடிகளுக்குள் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் ஆயத்தமாகிவிடவேண்டும் என்பது விதிமுறை. இதன்படி தகவலறிந்த ஒரு நிமிடத்துக்குள் வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் நிலையத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். நிமிடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற வேகத்தில் தீயணைப்பு வாகனத்தை ஓட்டுநர் இயக்க வேண்டும். அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை அடைய வேண்டும்.

ஆனால் தற்போது நிலவும் தீயணைப்பு வாகன ஓட்டுநர் பற்றாக்குறையால் இந்த நடைமுறை பாதிக்கப்படுவதாக துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் நகர்ப்புற பகுதிகளில் டபுள் மற்றும் டிரிபிள் யூனிட் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் சிங்கிள் யூனிட் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மாநில அளவில் இந்தவகை தீயணைப்பு நிலையங்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்தவகை நிலையங்களில் இரு ஓட்டுநர்கள் இருக்க வேண்டும் என்று விதி. ஆனால் பெரும்பாலான நிலையங்களில் ஒரேயொரு ஓட்டுநர் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோல டபுள்,டிரிபிள் தீயணைப்பு நிலையங்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டுநர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும்போதோ அல்லது தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படும்போதோ தீயணைப்பு வீரர்கள் வேகமாகவும், முழுமையாகவும் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாற்று ஓட்டுநர் இல்லாமல் ஒரே ஒட்டுநரே தொடர்ச்சியாகப் பணியில் இருப்பதால், அவர்களது பணித்திறன் குறைந்து சம்பவ இடங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் அடைய முடியாத அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தின்போது ஏற்படும் பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் தடுக்கும் வாய்ப்பு இருந்தும், போதிய ஒட்டுநர்கள் இல்லாததால் சேதங்களைத் தடுக்க முடியாமல் போய்விடுவதாக அத்துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தெரிவிக்கிறார். இதனால் பலநேரங்களில் சம்பவ இடங்களில் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகி சர்ச்சை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பற்றாக்குறை காரணமாக சக வீரர்களுக்கு கிடைக்கும் விடுமுறைகூட ஓட்டுநர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் பிற வீரர்களைக் காட்டிலும் ஓட்டுநர்களுக்கு சலுகைகள் குறைவாக இருப்பதினாலும், பணிச்சுமை அதிகம் இருப்பதினாலும் இந்த வேலையை தீயணைப்பு வீரர்கள் யாரும் விரும்புவதில்லை எனக் கூறுகின்றனர்.

ஆள்எடுப்புப் பணியின்போது ஓட்டுநர் பதவிக்கென தனியாக ஆள் எடுப்பதன்மூலமும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதன்மூலமும்தான் இந்த அவலத்தைப் போக்க முடியும் என்பதே தீயணைப்புறை உயர் அதிகாரிகள் பரிந்துரைக்கும் தீர்வாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT