கல்லூரி பாடத் திட்டத்தில் செம்மொழி வரலாறு புத்தகத்தால் சர்ச்சை
முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழும் வகையில் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த புத்தகத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழும் வகையில் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த புத்தகத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது.
அதைத் தொடர்ந்து, அந்தப் புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது.
கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த புத்தகம் விநியோகிக்கப்பட்டுவிட்ட நிலையில், பாடத்தை படிப்பதா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
ஏனெனில், பாடம் நீக்கப்பட்டதற்கான வெளிப்படையான உத்தரவை கல்லூரி நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை என மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இணைப்புக் கல்லூரிகளுக்கு பாடத் திட்டத்தை பல்கலைக்கழகம் நிர்ணயித்து அளிப்பதுபோல், தன்னாட்சிக் கல்லூரிகள் தாங்களாகவே பாடத்திட்டத்தை தயாரித்துக் கொள்ளலாம் என்பதோடு, தேர்வுக்கான கேள்வித் தாள்களையும் தாங்களாகவே தயாரித்து தேர்வையும் நடத்திக் கொள்ளலாம். தேர்வு முடிவுகளை மட்டும் பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்தால் போதுமானது.
இதனடிப்படையில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சென்னை நந்தனம் கலைக் கல்லூரி, பாடத் திட்டத்தை தாங்களாகவே நிர்ணயித்து வருகிறது.
இதில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இரண்டாம் பருவப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த செம்மொழி பண்புகள் என்ற பகுதிக்கு அதே கல்லூரி பேராசிரியர் எழுதிய "தமிழ்ச் செம்மொழி வரலாறு' என்ற புத்தகம் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் புத்தகத்துக்கு, மாணவர்கள் அனைவரிடமும் பணம் பெற்றுக்கொண்டு, புத்தகத்தையும் கல்லூரி நிர்வாகமே வழங்கியுள்ளது. அதே கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஆதிநாராயணன் என்பவர்தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
மொத்தம் 126 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தில் உலக செம்மொழி, இந்திய செம்மொழி குறித்த தகவல்கள் இடம்பெற்றிருப்பதோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தகவல்கள் 8 பக்கங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ச் செம்மொழி அறிந்தேற்பு வரலாறு என்ற பாடத்தில் "அறிஞர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பின் கீழ் வரும் விவரங்களில் "கலைஞர் கருணாநிதி' என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ப் பாடத்துக்கு மிக முக்கியமான செய்யுள் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த செம்மொழி வரலாறு புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது.
இந்த சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பான தகவல் உயர் கல்வித் துறை அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டியதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகிகளை அழைத்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
உயர் கல்வித் துறை செயலர் தலைமையிலான அதிகாரிகள் நந்தனம் கல்லூரி முதல்வர், தமிழ்த் துறை தலைவர் மற்றும் நூலாசிரியர் ஆதிநாராயணன் ஆகிய மூவரையும் இரு தினங்களுக்கு முன்பு வரவழைத்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது பாடத் திட்டத்தில் இந்தப் புத்தகம் ஏன் சேர்க்கப்பட்டது, முறைப்படி சேர்க்கப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
அப்போது இந்தப் பாடம் முறைப்படி கல்லூரி கல்விக் குழுவின் அனுமதியோடு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதுபோல் காட்டப்பட்டிருந்தாலும், போதிய அளவில் கல்விக் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்களின் ஒப்புதல் பெறமலேயே இந்தப் பாடம் சேர்க்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக அந்தப் பாடத்தை உடனடியாக பாடத் திட்டத்திலிருந்து நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தின் சார்பில், கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தமிழ்ச் செம்மொழி வரலாறு பாடத்தை பாடத் திட்டத்திலிருந்து கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது.
இதுகுறித்து நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியின் முதல்வர் பிரபு கூறியது:
தமிழ்ச் செம்மொழி வரலாறு பாடம் சேர்க்கப்பட்டது குறித்து உயர் கல்வித் துறை செயலர் தலைமையிலான அதிகாரிகள் எங்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்தோம். பின்னர் அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில், அந்தப் பாடத்தை பாடத் திட்டத்திலிருந்து உடனடியாக நீக்கி விட்டோம் என்றார்.