முகப்பு
சென்னை

தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் தியாகராய நகர்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், நகைகள் வாங்க சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் கூட்டம்

Updated On : 28 அக்டோபர், 2013 at 4:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:59 PM

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், நகைகள் வாங்க சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புரசை பகுதியும் மக்களின் பிடியில் திணறி வருகிறது.

மக்கள் தேவைக்கேற்ப அவர்கள் விரும்பும் வகையில் நவீன வடிவமைப்புகளில் ஆடைகள், பாத்திரங்கள், நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அத்தனையும் வழங்கும் பிரசித்தி பெற்ற கடைகள் பலவற்றை உள்ளடக்கிய வர்த்தக சாம்ராஜ்யமாக விளங்குகிறது சென்னை தியாகராய நகர். அனைத்து பண்டிகைகளின் போதும் இங்கு கூடும் பொதுமக்களின் எண்ணிக்கை திருவிழாக் கூட்டங்களை விஞ்சி வருகிறது.

 தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தியாகராயநகருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களாக தியாகராய நகரும், புரசைவாக்கமும் மக்களால் களைகட்டி வருகிறது

Advertisement

நெரிசலில் திணறும் ரங்கநாதன் தெரு: வார இறுதியான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலை 8 மணியில் இருந்தே உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை 10 மணிக்கெல்லாம் சிறிதும் இடைவெளி இல்லாமல் திரும்பிய திசை எல்லாம் மக்கள் தலைகளாக தென்படுகிறது. ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடியதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெறிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நிற்கும் வாகனங்ளை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் முழுவீச்சில் ஈடுபட்டு வருகினர். கூட்ட நெரிசலை சமாளிக்க ஏராளமான போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தியாகராயநகரில் உள்ள பெரும்பாலான கடைகளின் முன்பு ஐஸ்கிரீம், கிழங்கு, பழவகைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிற்றுண்டி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. கடும் நெரிசலால் கடைகளுக்குள் நுழைவதற்கே பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  கணவர்கள் வழக்கம்போல் கடைகளுக்கு வெளியே காத்திருக்க பெண்கள் துணிகளை வாங்கும் வேலையில் மூழ்கியுள்ளனர்.

பெண்களுக்கான ஆடைகள்: இந்த ஆண்டு, இளம்பெண்களுக்கான சுடிதார் வகைகளில், வேன்கா, மிஸ் பென்னட், லாரா ரைன், மரியா ஃப்ளோரா, பேபுளரி பர்ப்புள் உள்ளிட்ட பெயர்களில் ரூ.750 முதல் ரூ.4,500 வரையில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. பார்ப்பதற்கும் அணிவதற்கும் மிகவும் ரம்மியமாக உள்ள இந்த வகைகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

சேலை வகைகளில் பேன்சி, பூனம், சமீரா, இஸ்கின், திரிவேணி, மஹோட்சவ், சாட்டிகா உள்ளிட்ட பெயர்களில் ரூ.500 முதல் 6,500 வரை விற்கப்படுகிறது. மேலும் மிடி மற்றும் குர்தா வகைகளை இளம்பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இளைஞர்களுக்கான ஆயத்த ஆடைகளில் கொரியன் டிசைன், கார்கோ, பென்சில் கட், ஸ்ட்ரெச், லிபர்ட்டி உள்ளிட்ட ஜீன்ஸ் பேண்ட்களும், பருத்தியிலான சட்டை வகைகள் வந்துள்ளன. ஆண்கள் தங்களை நேர்த்தியாக காட்டும் ஆடை வகைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என்று ஜவுளிக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.

நடைபாதை கடைகளிலும் பேஷன் ஆடைகள் மற்றும் புதிய ரக பேன்ஸி வகை ஆபரணங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

வித விதமான நகைகள்: நகைக்கடைகளில் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் அணியும் ஆரம், நெக்லஸ்,கம்பல், மோதிரம் உள்ளிட்ட நகைகளும் புதிய பெயர்களோடும் அழகிய டிசைனிலும் இந்த பண்டிகையை அலங்கரிக்க வந்துள்ளது. இத்தாலியன் டிசைன், சைனிக் ஸ்டோன், ஸ்பெஷல் ரிங், பிளாக் பியரல் என்ற முத்து வகைகள், மயில்டிசைன் டாலர்கள் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் புதிய வடிவமைப்புகளில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், பெண்கள் மகிழ்ச்சியுடம் வாங்கி செல்வதாகவும் நகைக்கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

 இதேபோன்று வீட்டு உபயோகப் பொருள்கள், செல்போன், பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பண்டிகை கால சிறப்பு தள்ளுபடிகளும் இதற்கு காரணம்.

இதுகுறித்து செங்கல்பட்டை சேர்ந்த சியாமளா கூறியது: மற்ற இடங்களில் உள்ள கடைகளை காட்டிலும் தியாகராயநகர் பகுதியில் ஆடை வகைகள் விலை குறைவாக உள்ளதோடு ஏராளமான டிசைன்கள் உள்ளன. பட்டுச் சேலைகள் மற்றும் குழந்தைகளுக்கான பேன்ஸி ஆடைகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கூட்டம் அதிகம் இருந்தாலும் பணம் மிச்சப்படுவதால் ஆண்டுதோறும் குடும்பத்தோடு இங்கு வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறோம் என்றார்.

தீவிர கண்காணிப்பு: கூட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் கைவரிசையைக் காட்டும் திருடர்களைக் கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அல்லோகலப்படும் புரசைவாக்கம்: தியாகராயநகருக்கு இணையாக மக்கள் பர்சேஸ் செய்ய விரும்பும் மற்றுமொரு இடம் சென்னை புரசைவாக்கம். பிரபல கடைகளின் கிளைகளும் இங்கு உள்ளதால் மக்கள் புரசைவாக்கம் பகுதிக்கு திரும்பயுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.