முகப்பு
சென்னை

குன்னூர் மாஜிஸ்திரேட் கைது விவகாரம்: எஸ்.பி., டி.எஸ்.பிக்கள் நேரில் ஆஜராகி குற்றச்சாட்டுக்கு மறுப்பு 

குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் கைது விவகாரத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி மற்றும் இரண்டு டி.எஸ்.பி.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் கைது விவகாரத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி மற்றும் இரண்டு டி.எஸ்.பி.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராகினர்.

 அப்போது, அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். அந்த மறுப்பை மனுவாக தாக்கல் செய்ய அவர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 குன்னூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலைய பெண் எஸ்.ஐ. உமா மகேஸ்வரி கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி மகளிர் போலீஸ் நிலையத்தில் குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜுக்கு எதிராக ஒரு புகார் அளித்தார்.

 அந்தப் புகாரின் அடிப்படையில் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்ட நடைமுறையை மீறி மாஜிஸ்திரேட்டு கைது செய்யப்பட்டதாக வழக்குரைஞர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

 இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு தாமாக முன்வந்து (சூ மோட்டோ) நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.

 இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பாக மாஜிஸ்திரேட்டு தங்கராஜை கைது செய்த போலீஸôர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து வழக்குரைஞர்கள் சங்கமும்  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

 இந்த வழக்கு விசாரணை கடந்த முறை வந்த போது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜை கைது செய்யும் முன்பு நீலகிரி மாவட்ட தலைமை நீதிபதியிடம் அது குறித்து முறையாக தெரிவிக்கவில்லை.

 மேலும், அவரை கைது செய்தவுடன் நீலகிரி மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இது தவிர, மாஜிஸ்திரேட்டு தங்கராஜை அவரது சட்ட ஆலோசகரை தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை. இவையனைத்தும் வழிமுறைகளை மீறியதாகும்.

 இந்தக் குற்றச்சாட்டுகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி, பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், உடுமலைப்பேட்டை டி.எஸ்.பி. சி.பிச்சை ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இது குறித்து பதில் அளிக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (ஜூலை 23) வந்தது. விசாரணையின் போது, மூன்று அதிகாரிகளும் நேரில் ஆஜராகினர்.

 அப்போது, அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். அதற்கு வழக்குரைஞர்கள் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரபாகரன் வாய்மொழியாகக் கூறுவதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

 இதையடுத்து அவர்களது மறுப்பை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் மனுவாக தாக்கல் செய்ய அவர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →