பெரம்பூர் பகுதியின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட பல பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. அதனை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார் அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செளந்திரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி).
கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி மேம்பாட்டுக்காக செய்த பணிகள் குறித்து அவர் மேலும் கூறியது:
பெரம்பூர் தொகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மக்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய சுகாதாரப் பிரச்னையாகும். முறையாக அனுமதி பெறாமல் குப்பைகளை கொட்ட ஆரம்பித்து, இப்போது மலை மலையாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
அந்த குப்பைமேடுகளில் தீப்பிடிக்கும் சம்பவம், புகை மண்டலம், துர்நாற்றம், ஈ, கொசுக்கள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தன.
என் வீட்டை அந்தப் பகுதிக்கு அருகில் மீனாம்பாள் சாலைக்கு மாற்றினேன். என் வீட்டில் இருந்தே தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஒரு கருவியின் மூலம் குப்பை மேட்டுப் பகுதியின் காற்று எவ்வாறு மாசுபட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தோம். அந்த மாதிரியை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி அது புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சு மிகுந்த காற்று என்பதை உறுதி செய்தோம்.
அதனை அடிப்படையாகக் கொண்டு குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என்று சுமார் 3 ஆண்டுக் காலம் போராடினேன், 3 முறை கைது செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து குப்பைமேடு மீஞ்சூருக்கு மாற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி உறுதி அளித்தது.
தீப்பிடித்தல், புகை பரவுதல், துர்நாற்றம் வீசும் நிலை ஆகியவற்றை தாற்காலிகமாக கட்டுப்படுத்தி, தீமையின் அளவைக் குறைத்துள்ளோம்.
வீடுகளில் உருவாகும் குப்பையையை மொத்தமாக வாங்கி, ஓரிடத்தில் மொத்தமாகக் கொட்டக்கூடாது. குப்பையைச் சேகரிக்கும்போதே தரம் பிரித்து வாங்க வேண்டும் என்ற திட்டத்தை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஆரம்பித்தோம். ஆனால் அந்தத் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.
மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவு நீர்க் குழாய்களை அகலப்படுத்தாததினால், அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே உடைந்துவிடும். இதனால் கழிவு நீர் தெருக்களில் தேங்கி நிற்கும்.
அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டப்பேரவையில் குரல் எழுப்பியதன் விளைவாக குழாயை மாற்ற அரசு அனுமதி அளித்து, அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
மூலக்கடை- வியாசர்பாடி பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே விடப்பட்டது.
அதனை உடனே கட்டி முடிக்க வேண்டும் என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு இறுதியில் அந்தப் பாலம் திறக்கப்பட்டது.
வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் 80 சதவீதம் தலித் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் போதுமான பாடப் பிரிவுகள் இல்லை. பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராகவும் இருந்ததால், இந்தக் கல்லூரியில் 18 புதிய பாடப் பிரிவுகள் கொண்டு வரப்பட்டன. இளநிலை விஷூவல் கம்யூனிகேஷன், முதுநிலை படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நவீன கால பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கல்லூரி கிரேட் 1 கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள் கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பூர் தொகுதி முழுவதும் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை காணப்பட்டது. இதன் காரணமாக மின்சாரம் இருந்தாலும் வீட்டில் எந்த மின்சாதனப் பொருள்களும் இயங்காத சூழ்நிலை இருந்தது. மின் துறை அமைச்சரைச் சந்தித்து, போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக ஒரு துணை மின்நிலையம், 22-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு குறைந்த மின் அழுத்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.
கேப்டன் காட்டன் கால்வாயில் படர்ந்து காணப்பட்ட ஆகாயத் தாமரை அகற்றப்பட்டது. கால்வாயின் இருபுறங்களில் கைப்பிடிச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
நிறைவேற்றப்படாதவை: கொடுங்கையூர் குப்பைமேட்டை மீஞ்சூருக்கு மாற்றும் பணி நிலுவையில் உள்ளது. அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும். குப்பைகள் வீடுகளிலேயே தரம் பிரித்து வாங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கழிவு நீர்க் குழாயை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு பணிகள் அரசின் தாமதத்தின் காரணமாக பாதியில் நிற்கிறது. அவ்வாறு தொடங்கப்பட்டு பாதியில் நிற்கும் பணிகளை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-த.அரவிந்தன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.