சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் கல்லூரி பேராசிரியர்கள், கிறிஸ்தவ மதபோதகர்கள் மூலம் நூதனமான விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை காவல் துறை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலை விபத்துகளில் சிக்கி காயமடைவோர், இறப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 2016 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சென்னை முழுவதும் 140 சாலை விபத்துகள் ஏற்பட்டன. இதில் 112 பேர் காயமடைந்தனர். இதில் 30 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் 5 பேர் இறந்தனர்.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு (2017) சனிக்கிழமை நள்ளிரவு பிறப்பதையொட்டி அதனை கொண்டாடுவதற்கு சென்னைவாசிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், சென்னை காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர் காவல் மாவட்டம், புத்தாண்டில் சாலை விபத்துக்களைத் தவிர்க்க நூதனமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடந்த சில நாள்களாக நடத்தி வருகிறது.
இளைஞர்களுக்கு அறிவுரை: குறிப்பாக போலீஸார் கிறிஸ்தவ மதபோதகர்கள் மூலம் இப்போதே வழிபாட்டுக்கு வரும் இளைஞர்களிடம் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்ட வேண்டாம், கட்டுப்பாடின்றி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும்தான் பொதுவாக வாகன விபத்துகளில் சிக்குகின்றனர். இதனை தடுக்கும் வகையில், இவர்களுக்கு மதபோதகர்கள், பேராசிரியர்கள் மூலம் அறிவுரை வழங்கும் நடவடிக்கைகளை அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டுமென மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன்அறிவுறுத்தியுள்ளார்.
கையெழுத்து இயக்கம்: இதேபோல் வணிக நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களிடம் புத்தாண்டு விபத்தில் சிக்க வேண்டாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
மேலும் மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம்,ராஜா அண்ணாமலைபுரம், அபிராமபுரம் பகுதிகளில் கையெழுத்து இயக்கத்தை புதன்கிழமை தொடங்குகிறோம். இந்த நடவடிக்கைகளின் மூலம் விபத்தில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டப்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சித்தான் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.