துணைவேந்தர் நியமனம் எப்போது?சென்னை பல்கலை. பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகமாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது.
தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகமாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தினதுணைவேந்தராக இருந்த ஆர். தாண்டவனின் பதவிக் காலம் 17-1-2016 தேதியோடு முடிவுக்கு வந்தது. 18-1-2016 அன்று அவர் விடைபெற்றார். அதன் பிறகு நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதும், பல்கலைக்கழகத்துக்கு இன்னும் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
பேராசிரியர் தாண்டவன் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, துணைவேந்தர் பணியை ஆற்ற உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் கல்லூரி கல்வி இயக்குநர் சேகர், பல்கலைக்கழக பேராசிரியர் தங்கம் மேனன் ஆகிய மூவர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
Advertisement
இதில் தங்கம் மேனனின் பணிக் காலம் 4-2-2016 அன்றோடு முடிவுக்கு வந்ததால், 9-2-2016 அன்று நடைபெற்ற ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் பேராசிரியர் ஜோதி சிவஞானம், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களில் பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன் அதிக மூப்பு பெற்றவர் என்றபோதும், அவரது பணிக்காலம் முடிவடைந்து கூடுதல் காலத்தில் பணியாற்றி வருகிற காரணத்தால் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படவில்லை. இதனால், பேராசிரியர் ஜோதி சிவஞானம் புதிய பொறுப்பை ஏற்று, துணைவேந்தர் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், 18-3-2016 அன்று சிறப்பு ஆட்சி மன்றக் கூட்டத்தைக் கூட்டிய அபூர்வா, வாய் மொழி உத்தரவின் அடிப்படையில் ஜோதி சிவஞானத்தை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஸ்ரீமன் நாராயணனை நியமித்தார்.
"இது பல்கலைக்கழக மரபுகளையும், விதிகளையும் மீறிய செயல். ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி புதிய உறுப்பினரை நியமிக்கக் கூடாது' என சில பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனால், ஸ்ரீமன் நாரயணனை நியமித்து 3 மாதங்கள் ஆக உள்ள நிலையில், அவருடைய நியமனத்துக்கான ஒப்புலை பெறுவதற்கான தீர்மானம் திங்கள்கிழமை (ஜூன் 13) நடைபெற உள்ள ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கொண்டுவரப்படுகிறது.
பல்கலைக்கழக மரபு மற்றும் விதிகளின்படி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரை நீக்குவதற்கோ அல்லது புதிதாக ஒருவரை நியமிப்பதற்கோ முதலில் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இந்தத் தீர்மான நகல்கள் குறைந்தபட்சம் 2 வாரத்துக்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும். மிக அவசர தீர்மானமாக இருந்தால், ஆட்சிமன்றக் குழு கூட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தீர்மான நகல் உறுப்பினர்களுக்கு அளித்தாக வேண்டியது கட்டாயம்.
ஆனால், பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன் நியமனத்தில் இந்த நடைமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. அனைத்து ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை என்றபோதும், உயர் கல்வித் துறை செயலர் என்பதாலேயே உடனடியான எதிர்ப்பைத் தெரிவிக்க உறுப்பினர்கள் முன்வரவில்லை.
கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், புதிய படிப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவது, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் வழங்குவது, வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவது, ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பல பணிகள் நிலுவையில் உள்ளன.
எனவே, தேவையற்ற சர்ச்சைகளில் பல்கலைக்கழகம் சிக்குவதைத் தவிர்த்து, ஆராய்ச்சி மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு சுமூகமான முறையில் பல்கலைக்கழகத்தை நடத்திச் செல்ல துணைவேந்தரை விரைவில் நியமிக்க வேண்டும் என்கின்றனர் பேராசிரியர்கள்.