முகப்பு
சென்னை

ரூபாய் நோட்டுகளை மாற்ற நீண்ட வரிசை

செல்லாத நோட்டுகளை மாற்ற வங்கிகளில் போதிய வசதிகளை செய்யாததால் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமலும், செலவுக்கே பணம் இல்லாமலும் திண்டாடி வருவதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

Updated On : 14 நவம்பர், 2016 at 12:53 PM
சென்னை செüகார்பேட்டை ரமணன் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையின் முன் திரண்டிருந்தோர்.
பகிர்:

செல்லாத நோட்டுகளை மாற்ற வங்கிகளில் போதிய வசதிகளை செய்யாததால் பழைய நோட்டுகளை மாற்ற முடியாமலும், செலவுக்கே பணம் இல்லாமலும் திண்டாடி வருவதாக மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ரூபாய் நோட்டுகளை மாற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அல்லது நேரடியாக அனுமதித்து மாற்றிகொள்ளும் வகையில் வங்கிகள் வசதி செய்துதர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பு வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பின்னர், இந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருவர் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்றிகொள்ள முடியும். அதற்கு அதிகமான தொகையாக இருந்தால், கணக்கு வைத்துள்ள வங்கியில் வைப்பு செய்து ரூ.10 ஆயிரம் எடுத்துகொள்ள முடியும் எனவும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு காரணமாக கடந்த 10-ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து பணத்தை மாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒருசில ஏடிஎம் மையங்கள் மட்டும் செயல்படுவதால், அனைத்து தரப்பினரும் வங்கிகளிலேயே குவியும் நிலை உருவாகி வருகிறது. இவ்வாறு பணத்தை மாற்ற சாதாரண மக்கள் பல்வேறு அவதிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகளின் நிலை மிகுந்த கவலைக்குரியதாகியுள்ளது.
பணத்தை மாற்றிகொள்ள மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி வரிசை இல்லாதது, பெரும்பாலான வங்கிகளில் சாய்வு தளம் இல்லாதது, பல பகுதிகளில் மாடிகளில் வங்கிகள் அமைந்திருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மாற்றுத்திறனாளிகள் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் கூறியது:
மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு சாதாரண மக்களைக் காட்டிலும், மாற்றுத்திறனாளிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாததால், அறிவிப்பு வெளிவந்து 4 நாள்களுக்கு மேலாகிவிட்டபோதும் பல மாற்றுத்திறனாளிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல், செலவுக்கு பணமின்றி அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை, மதுரை, ஈரோடு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதே நிலைதான் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது. எனவே, பணத்தை மாற்ற மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படவேண்டும்.
மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ஒரு நபர் ரூ. 2.5 லட்சம் மட்டுமே வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகளிடமிருந்து உதவிகளை பெறும் அரசுசார தன்னார் அமைப்புகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, தன்னார்வ அமைப்புகளுக்கு இந்த உச்சவரம்பை நீக்கவேண்டும்.
நியாயமாக கணக்குகளைப் பராமரித்து வரும் தன்னார்வ அமைப்புகளுக்கு, உரிய விசாரணைக்குப் பிறகு கூடுதல் தொகையை வைப்புத் தொகையாக செலுத்த அனுமதிக்கலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.