சென்னை

அயப்பாக்கம் காவல் நிலையப் பிரச்னைக்கு தீர்வு வருமா?

DIN

அயப்பாக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட காவல் நிலையம் குறித்த பிரச்னையில் உரிய தீர்வு கண்டு, காவல் நிலையத்தை செயல்படச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம், 1994-இல் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் ஏரி, அயப்பாக்கம் ஏரி, கோலடி ஏரி ஆகிய 3 ஏரிகளிலிருந்து 410 ஏக்கர் நிலத்தில் நீரை வெளியேற்றிவிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், உலக வங்கி நிதியுதவியுடன் அயப்பாக்கம் உருவாக்கப்பட்டது. தற்போது, இங்கு 21 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், கடந்த 1994-இல் வீட்டுவசதி வாரியம் சார்பில் காவல் நிலையம் கட்டப்பட்டது. பின்னர், அதற்கான தொகையை செலுத்திவிட்டு கட்டடத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறை தலைமைக்கு வீட்டு வசதி வாரியம் கடிதம் எழுதியது.
அதற்கு, காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகவும், காவல் நிலையம் அமைந்துள்ள இடத்தை இலவசமாக வழங்கினால் பயன்படுத்திக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டது. பின்னர், இப்பிரச்னை கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, காவல் நிலையக் கட்டடம் போதிய பராமரிப்பின்மை காரணமாக சிதிலமடைந்தது.
தற்போது, கட்டடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டுவசதி வாரிய அதிகாரியொருவர் கூறியதாவது:
உலக வங்கி நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு சென்ட் கூட இலவசமாக வழங்கக் கூடாது.
எங்களிடம் அயப்பாக்கம் காவல் நிலையத்தை இலவசமாக கேட்கும் காவல்துறை அதிகாரிகள், நொளம்பூர் காவல் நிலையத்துக்கு எவ்வாறு பணம் செலுத்தினர்? ஆகவே, கட்டடத்துக்கான தொகையை கழித்துவிட்டு நிலத்துக்குரிய பணத்தை செலுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து, காவல்துறை உயரதிகாரியொருவர் கூறியதாவது:
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், அயப்பாக்கத்துக்கு தனி காவல் நிலையம் வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அப்போதைய காவல்துறை தலைமை, காவல் நிலையம் கட்ட இடம் கேட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது. எனினும், வீட்டு வசதி வாரியம் அனுப்பிய பதில் கடிதம் குறித்து தெரியாது.
இந்த விவகாரம் குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும். அயப்பாக்கத்துக்கு தனி காவல் நிலையம் கொண்டு வர முயற்சி செய்யப்படும் என்றார்.
இதனிடையே, சட்டம், ஒழுங்குப் பிரச்சனை, திருட்டு, கொள்ளை என எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலையில் குடியிருப்புவாசிகள் உள்ளனர்.
எனவே, அயப்பாக்கம் காவல் நிலையம் குறித்த பிரச்னைக்கு தீர்வு கண்டு, காவல் நிலையத்தை செயல்படச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT