சென்னை தீவுத் திடலில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள். 
சென்னை

தீவுத் திடல் பட்டாசு பஜாரில் பாதுகாப்பு அதிகரிப்பு

சிவகாசி, கோவையில் பட்டாசுக் கடை, கிடங்குகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளைத் தொடர்ந்து, சென்னை தீவுத் திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எஸ். பாண்டியன்

சிவகாசி, கோவையில் பட்டாசுக் கடை, கிடங்குகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளைத் தொடர்ந்து, சென்னை தீவுத் திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை வருகிற 29 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், தீபாவளிக்கான பட்டாசுகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை சிவகாசி பட்டாசு கடையிலும், வெள்ளிக்கிழமை கோவை காந்தி பஜார் கிடங்கிலும் எதிர்பாரதவிதமாக பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளும் நேரிட்டன.
இதைத் தொடர்ந்து, மாநில அளவில் அனைத்து பட்டாசு கடைகள், கிடங்குகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரத்தில் சில்லறை விற்பனைக் கடைகளிலும், சென்னை தீவுத் திடல் பகுதியில் பட்டாசு பஜாரிலும் பட்டாசுகள் விற்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் வரும்போது, அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கும் நோக்கத்தில் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல, ஒவ்வொரு பட்டாசு கடையிலும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவும் அரசு வலியுறுத்தியுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு விதிமுறைகள்: பட்டாசு கடைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தீயணைப்பு துறை அதிகாரி மணிகண்டன் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில் கடந்தாண்டைவிடக் குறைந்த அளவிலேயே பட்டாசு கடைகள் நடத்த விண்ணப்பித்துள்ளனர். இதனால், கடைகள் அமையவுள்ள இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரையில் 870 சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், தீவுத்திடல் பகுதியில் 58 பெரிய அளவிலான விற்பனைக் கடைகளுக்கும் பட்டாசுகள் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பட்டாசு கடை, கோவை பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்துகளைத் தொடர்ந்து, பட்டாசு கடைகளில் பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாகப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எளிதில் தீப்பற்றும் பொருள்களை எடுத்து வருவதைத் தடுக்கும் வகையில், சோதனைக்கு பின்னரே தீவுத் திடலுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், விபத்துகளைத் தடுக்க, தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கடையிலும் தீயணைப்புக் கருவி, மணல் வாளி, தண்ணீர் வாளியும் வைக்க வேண்டும். வாகனங்களில் பட்டாசு பண்டல்களை தூக்கிப் போடாமல், உராய்வு இல்லாமல் மெதுவாக இறக்கி வைப்பது தொடர்பாக தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
24 மணி நேரமும் பாதுகாப்பு: சென்னை மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரகுமான் கூறிதாவது:
பட்டாசு கடைகளில் விபத்துகள் நிகழாமல் தடுக்கும் நோக்கில், அரசு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுகினறன. இதேபோல, குவிந்து கிடக்கும் காகிதக் குப்பைகளை அகற்ற இரவும், பகலும் 20 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கடையிலும் பட்டாசு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விளம்பரப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை, தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

8 நுழைவு வாயில்களையும் திறக்க ஏற்பாடு
சென்னை தீவுத் திடலில் 58 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வரும்போது, வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். இதைச் சமாளிக்கும் வகையில் பிராட்வே சாலை, போர் நினைவுச் சின்னம் சாலைப் பகுதிகளில் உள்ள தீவுத் திடலின் 8 நுழைவு வாயில்களையும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், பொதுமக்கள் பட்டாசுகளை சிரமமின்றி வாங்கிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்துகள் நிகழாமல் தடுக்கும் வகையில், பரிசோதனைக்குப் பிறகே பொதுமக்கள் தீவுத் திடலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT