சென்னை

பக்க விளைவுகள் இல்லாத மாற்று மருத்துவ முறை அவசியம்

DIN

ஆரோக்கியத்துடன் வாழ பக்கவிளைவுகள் இல்லாத மாற்று மருத்துவ முறை அவசியம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினர் மு.ராஜாராம் வலியுறுத்தினார்.
உலக அக்குபஞ்சர் தினத்தை முன்னிட்டு, ரங்கா அக்குபஞ்சர், யோகா சமூக சுகாதார கல்வி வளர்ச்சி அறக்கட்டளை ஆகியன சார்பில் அக்குபஞ்சர் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், "முதலுதவி அக்குபிரஷர்' என்ற நூலை வெளியிட்டு மு.ராஜாராம் பேசியது:-

இன்றைய சூழலில் 75 சதவீத நோய்களை நாமே தேடிக் கொள்கிறோம். உணவு, வாழ்க்கை முறை, செயல்பாடுகளே இதற்கு காரணம். தற்போது சந்தையில் முன்னணியில் உள்ள குளிர்பானங்களில் பெரும்பாலானவற்றில் நச்சுத்தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்கள் இவற்றைத் தவிர்த்து இளநீர், பதநீர் போன்ற சத்துகள் மிகுந்த இயற்கை பானங்களை அருந்த வேண்டும்.

இந்தியாவில் புத்த மதம் தோன்றி இலங்கை, ஜப்பான் உள்பட பல நாடுகளுக்குப் பரவியதோ அதேபோன்று அக்குபஞ்சர் மருத்துவ முறை சீனாவில் தோன்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. அரசு மருத்துவ முறைகளில் அக்குபஞ்சர் மருத்துவம் இடம் பெறும் என முதல்வர் ஜெயலலிதாவும் அறிவித்துள்ளார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பெரும்பாலான மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்கள் புற்றுநோயை உருவாக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, ஆரோக்கியமாக வாழ பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, எளிய முறையில் பயன்படுத்தக் கூடிய இந்த மாற்று மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டும். அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் அளவுக்கு மருத்துவர் ரவிச்சந்திரனிடம் திறமை உள்ளது என்றார் மு.ராஜாராம்.

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்: மருத்துவம் என்று சொன்னால் அது உயர் சிகிச்சையை மட்டும் குறிப்பிடுவதல்ல. நாளுக்கு நாள் புதிய புதிய நோய்கள் பரவி வருகின்றன. மாத ஊதியமாக சுமார் ரூ.10,000 முதல் ரூ.15,000 வாங்குவோர் மருத்துவத்துக்கு என கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் நோயின்றி நீண்ட நாள் வாழவும், உடலை பேணி பாதுகாக்கவும் அதிகம் செலவில்லாத மாற்று மருத்துவ முறை அவசியம்.

நோய்களை சிறந்த முறையில் குணப்படுத்தக் கூடிய அக்குபஞ்சர் மருத்துவ பயிற்சி முறைகள் கிராமங்களுக்கு அதிகளவில் சென்றடைய வேண்டும். நுணுக்கமான முறையில் புள்ளிகளைத் தேர்வு செய்து அழுத்தம் கொடுப்பதால் நோய்களுக்கு உடனடித் தீர்வு கிடைக்கிறது. எந்த இடத்தில் இருந்தாலும் உரிய பயிற்சியின் மூலம் நமக்கு நாமே செய்து கொள்ளும் இந்தச் சிகிச்சை முறை குறித்து இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும் யோகா, தியானம் ஆகியவற்றுடன் அக்குபஞ்சர் மருத்துவ முறையும் இடம் பெற வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.விஜயராகவன், நீதிபதி சு.வணங்காமுடி, ரங்கா அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் எஸ்.ரவிச்சந்திரன், மக்கள் கல்வி மைய இயக்குநர் பி.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல் கட்டம் 66.14%, 2-ஆம் கட்டம் 66.71% வாக்குப் பதிவு

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT