சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்
சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து, கார் ஆகியவை கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து, கார் ஆகியவை கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து 25 ஜி மாநகரப்பேருந்து பூந்தமல்லியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வந்துகொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் குணசீலன் ஓட்டினார். பேருந்தில் நடத்துநர் ரமேஷ் உள்பட 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்தப் பேருந்து சர்ச் பார்க் பள்ளி, அமெரிக்க தூதரகத்துக்கு இடையே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றது. இதையடுத்து பயணிகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர்.
அப்போது, பேருந்து முன்னும் பின்னும் அசைவது போன்ற உணர்வு ஏற்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை விட்டு கீழே இறங்கி சக்கரங்களை சரிபார்த்தார். அந்தநேரத்தில், சாலையில் விரிசல் ஏற்பட்டு பள்ளம் விழுந்தது. அதைத் தொடர்ந்து பேருந்து மெதுவாக பள்ளத்தில் இறங்கத் தொடங்கியது. நிலைமையை உணர்ந்த ஓட்டுநரும், நடத்துநரும் பயணிகளை அவசர அவசரமாக இறக்கி விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்து நின்ற பகுதியில் திடீரென ஏற்பட்ட 8 அடி பள்ளத்தில் மாநகரப் பேருந்தின் முன்பகுதி, பின்னால் வந்த கார் ஆகியவை சிக்கின. காரிலிருந்த மாதவரத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் தப்பினார். பேருந்து பள்ளத்தில் சிக்கிய அதிர்ச்சியில் அதில் இருந்த பயணிகள் அலறினர். அவர்கள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பேருந்திலிருந்து மீட்கப்பட்டனர். இருப்பினும் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் ஆகியோர் உள்பட காவல்துறை, போக்குவரத்து போலீஸார், போக்குவரத்துதுறை, மெட்ரோ ரயில் நிர்வாகம், தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புக்குழு உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே பள்ளத்தில் சிக்கிய பேருந்து, காரை பார்ப்பதற்காக பொதுமக்கள் கூடியதால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக எல்ஐசி-யிலிருந்து, அண்ணா சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், கடற்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. ஆயிரம் விளக்கு வழியாக அண்ணாசாலை வழியில் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து, காரை மீட்கும் பணி தொடங்கியது. முன்னதாக மீட்பு பணிகள், இதர நடவடிக்கை குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம், போக்குவரத்துறை, மீட்புக்குழுவினர் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம், மீட்புக்குழுவும், மாநகரப் பேருந்து ஊழியர்களும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்புப்பணியில் இரண்டு ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து முதலில் கார் மீட்கப்பட்டது. அதையடுத்து பேருந்தைச் சுற்றி ஃபைபர் கயிறுகள் சுற்றப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் மாலை 4.10 மணிக்கு பேருந்து மீட்கப்பட்டு மாநகரப்பேருந்து பணிமனைக்கு அனுப்பப்பட்டது.
அப்போது, மீட்புப் பணிகளை காண பொதுமக்கள் கூடினர். இதனால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. பின்னர், சம்பவம் நடந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள், தடுப்பு சீலைகள் உள்ளிட்டவை அமைத்து மேலும் சாலையை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனி பள்ளம் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்
அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் போல் இனிவரும் காலங்களில் ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.
சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தும் காரும் கவிழ்ந்தன.
இதையடுத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து, உரிய அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மீட்புப் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலையின் அடிப்புறத்தில் உள்ள மண்ணின் ஈரப்பதமும், கெட்டித்தன்மை இல்லாமல் இருப்பதும் பள்ளம் ஏற்பட காரணமாக உள்ளது.
இந்தச் சம்பவத்தை அரசு அனுபவப் பாடமாக எடுத்துகொண்டு இனி இதுபோன்ற பள்ளம் ஏற்படாதவாறு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.