மீனவர் அடித்துக் கொலை: இளைஞர் கைது
சென்னை, காசிமேட்டில் கருவாடு காய வைப்பதில் ஏற்பட்ட தகராறில், மீனவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, காசிமேட்டில் கருவாடு காய வைப்பதில் ஏற்பட்ட தகராறில், மீனவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
காசிமேடு, சிங்காரவேலர் நகர் 2-ஆவது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (55). மீனவரான இவர், அழுகிப்போன மீன்கள், கருவாடுகளை காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் காய வைத்து, அதை கோழி தீவனமாக்கி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கருவாடுகளை காய வைப்பது தொடர்பாக சிங்காரவேலர் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த சுரேஷூக்கும் (35), சிவலிங்கத்துக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுரேஷ், சிவலிங்கத்தை வேகமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் தடுமாறி சிவலிங்கம் கீழே விழுந்ததில் அவர் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த சிவலிங்கம் மயங்கியதும், சுரேஷ் அங்கிருந்து தப்பியோடினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சிவலிங்கம் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய சுரேஷை கைது செய்தனர்.