ஆசிரியர் தேர்வில் முறைகேடு: முக்கிய இடைத்தரகர் கைது
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணியிடத் தேர்வில் முறைகேடு செய்த வழக்கில், முக்கிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணியிடத் தேர்வில் முறைகேடு செய்த வழக்கில், முக்கிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள், கடந்த நவ.7-ஆம் தேதி வெளியானது.
இத்தேர்வு முடிவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மதிப்பெண்கள் குறித்து சந்தேகமடைந்த தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இது தொடர்பாக புகார்களை அனுப்பினர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 200-க்கும் மேற்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்கள் அவர்களது விடைத் தாள்களில் இருந்த மதிப்பெண்ணுடன் முரண்பட்டிருந்தது தெரியவந்தது.
முக்கியமாக சிலருக்கு 60 மதிப்பெண்ணில் இருந்து 80 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் இருப்பது தெரியவந்தது.
இடைத்தரகர் கைது: இந்நிலையில் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா, சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் புகார் செய்தார்.
அப்புகாரின் அடிப்படையில், அந்த தேர்வுக்குரிய விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரித்த தில்லி நிறுவனம், தேர்வில் முறைகேடு செய்த 156 பேர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த முறைகேட்டில் முக்கிய இடைத்தரகராக, சென்னை, முகப்பேரைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் கணேசன் (38) செயல்பட்டிருப்பதும், அவர் 5 பேரிடம் பணம் பெற்று மதிப்பெண்களை மாற்றியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் கணேசனை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்குத் தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.